வாகன சோதனையின்போது பிரபல நடிகையின் காரில் மது பாட்டில்கள் சிக்கியது


வாகன சோதனையின்போது பிரபல நடிகையின் காரில் மது பாட்டில்கள் சிக்கியது
x
தினத்தந்தி 14 Jun 2020 2:00 AM IST (Updated: 14 Jun 2020 12:12 AM IST)
t-max-icont-min-icon

வாகன சோதனையின்போது பிரபல நடிகையின் காரில் மது பாட்டில்கள் சிக்கியது.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த முட்டுக்காடு பகுதியில் சென்னை மாநகர போலீஸ் எல்லை முடிகிறது. கொரோனா வைரஸ் காரணமாக சென்னையை தவிர பிற மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு உள்ளது. எனவே வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் வாகனங்களில் மதுபானங்கள் கடத்தி வரப்படுகிறதா? என கானத்தூர் போலீசார் இந்த பகுதியில் சோதனை சாவடி அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்தநிலையில் இந்த சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த கானத்தூர் போலீசார், அந்த வழியாக வந்த ஒரு சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் 96 பீர் பாட்டில்கள், 8 மதுபாட்டில்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். காரில் இருந்த மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக காரை ஓட்டிவந்த சென்னை அபிராமபுரத்தைச் சேர்ந்த டிரைவர் செல்வக்குமார்(வயது 37) என்பவரை கைது செய்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் செல்வக்குமாரை சொந்த ஜாமீனில் விடுவித்தனர். காரின் பதிவு எண்ணை வைத்து பார்த்த போது அது பிரபல நடிகைக்கு சொந்தமான கார் என தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.



Next Story