மருத்துவ நிபுணர்களுடனும் ஆலோசனை எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்


மருத்துவ நிபுணர்களுடனும் ஆலோசனை எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்
x
தினத்தந்தி 15 Jun 2020 5:15 AM IST (Updated: 15 Jun 2020 2:02 AM IST)
t-max-icont-min-icon

எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழகத்தில் நேற்று வரையிலான நிலவரப்படி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44 ஆயிரத்தை கடந்துள்ளது. இதில் தலைநகர் சென்னையில் மட்டும் 31 ஆயிரத்து 896 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவல் ஏற்படும் உயிர்ப்பலியும் தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருவது கவலை அளிக்கும் விதமாக உள்ளது.

கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்றும், முன்வரிசை பணியாளர்களையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. எம்.எல்.ஏ.க்கள், டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள், போலீசார், தலைமைச்செயலக ஊழியர்கள் என அனைத்து தரப்பினருக்கும் கண்ணுக்கு தெரியாத நுண் கிருமி சிம்ம சொப்பனமாக திகழ்கிறது.

வரலாற்றில் முதல் முறையாக தலைமைச்செயலகம் மூடப்பட்டு கிருமிநாசினி அளிக்கப்படும் பணி கடந்த 2 நாட்களாக நடந்தது.

மோடியுடன் ஆலோசனை

கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு அமைக்கப்பட்ட மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவின் பரிந்துரைகளை ஏற்று தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் நோய் தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை மட்டும் குறைந்தபாடில்லை. அரசு பிறப்பித்த வழிகாட்டுதல்களை மக்கள் முறையாக பின்பற்றாததே நோய் தொற்று பரவ காரணம் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் நோய் தொற்று அதிகம் உள்ள சென்னையில் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட இருப்பதாக வெளியான தகவலை தமிழக அரசு திட்டவட்டமாக மறுத்தது.

இதற்கிடையே சுகாதாரத்துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக இருந்த ஜெ.ராதாகிருஷ்ணன் சுகாதாரத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுதினம் (புதன்கிழமை) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் காணொலிக்காட்சி மூலமாக ஆலோசனை நடத்த உள்ளார்.

மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை

இந்த பரபரப்பான சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற உள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமைச்செயலாளர் க.சண்முகம், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் மருத்துவ நிபுணர்கள் குழுவை சேர்ந்த டாக்டர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்கள்.

கூட்டத்தில், மருத்துவ நிபுணர்கள் கொரோனா பரவலை தடுப்பதற்காக என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கலாம்?, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் என்னென்ன நடவடிக்கைகளை தீவிரப்படுத்தப்பவேண்டும்?, கொரோனா சிகிச்சை முறைகளில் செய்யவேண்டிய மாற்றங்கள் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து பரிந்துரைகளாக வழங்க இருக்கிறார்கள்.

அமைச்சரவை கூட்டம்

இதையடுத்து பகல் 12 மணிக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், நோய் தாக்கம் அதிகம் உள்ள சென்னையில் எடுக்கவேண்டிய கடும் நடவடிக்கைகள் குறித்தும், ஊரடங்கில் புதிய மாற்றங்களை கொண்டுவருவது குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் அவசர சட்டம் கொண்டு வருவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்?

மருத்துவ நிபுணர்கள் குழு மற்றும் அமைச்சரவை கூட்டத்துக்கு பின்னர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் வகையில் முக்கியமான அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தலைமைச்செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த அறிவிப்புகள் சென்னை உள்பட நோய் தொற்று அதிகமாக உள்ள இடங்களில் ஊரடங்கினை கடுமையாக அமல்படுத்துவது குறித்து இருக்கலாம் என்று தெரிகிறது.

அது எந்த மாதிரியான நடவடிக்கை என்பது குறித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடும் என்று கூறப்படுகிறது.

Next Story