சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்


சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்
x
தினத்தந்தி 16 Jun 2020 4:21 PM IST (Updated: 16 Jun 2020 4:21 PM IST)
t-max-icont-min-icon

லடாக்கில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் பழனியின் குடும்பத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் படைகளை குறைக்கும் நடவடிக்கையின் போது சீன ராணுவம் அத்துமீறியது. அப்போது சீன ராணுவத்துடனான மோதலின் போது இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் மற்றும் வீரர்கள் 2 பேர் வீரமரணம் அடைந்தனர். 3 பேர் வீரமரணத்தை தொடர்ந்து லடாக்கில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க இந்திய - சீன ராணுவ உயர் அதிகாரிகள் சந்தித்து பேசி வருகின்றனர்.

லடாக்கில் உயிரிழந்த 3 ராணுவ வீரர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த பழனி ஆவார். இவர் ராமநாதபுரம் திருவாடானை பகுதியைச் சேர்ந்தவர். 40 வயதான பழனி இந்திய ராணுவத்தில் கடந்த 22 வருடங்களாக ஹவில்தாராக பணியாற்றி வந்தார்.

பழனிக்கு திருமணமாகி 10 வயதில் ஒரு பெண் குழந்தையும், 8 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். பழனியின் உயிரிழப்பு அவரது குடும்பத்தினர் மற்றும் ஊர் மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் பழனியின் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். பழனியின் உயிரிழப்பு மிகுந்த வேதனை அளிப்பதாகவும் அவரது குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

உயிரிழந்த மூன்று ராணுவ வீரர்களுக்கும் பிரதமர் மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளார். முதலமைச்சர்களுடன் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மோடி தனது இரங்கலை தெரிவித்தார்.

Next Story