ஊரடங்கை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் ஐகோர்ட்டு உத்தரவு


ஊரடங்கை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 17 Jun 2020 11:45 PM GMT (Updated: 17 Jun 2020 9:05 PM GMT)

ஊரடங்கை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 24-ந்தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு சில தளர்வுகளுடன் வருகிற 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இந்த ஊரடங்கு உத்தரவை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் இமானுவேல் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘ கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டு பிடிக்கும் வரை, முககவசம், கையுறை உள்ளிட்டவைகளை அணிந்து பரவலை தடுக்க வேண்டும். எனவே, ஊரடங்கை நீட்டித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும்‘ என்று கூறியிருந்தார்.

ரூ.50 ஆயிரம் அபராதம்

இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் விசாரித்தனர். மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபாலன், ‘பேரிடர் மேலாண்மைச் சட்டப்பிரிவுகளின் கீழ் இது போன்ற சூழ்நிலையில் மத்திய, மாநில அரசுகள் பொது உத்தரவை பிறப்பித்து அதை அமல்படுத்த அதிகாரம் உள்ளது‘ என்று வாதிட்டார்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு பிளடர் ஜெயபிரகாஷ் நாரயணன், ‘இதே கோரிக்கையுடன் தொடரப்பட்ட 4 வழக்குகளை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது. அதுமட்டுமல்ல. மனுதாரர் ஒரு அரசியல் கட்சியின் நிர்வாகி. அரசியல் கட்சி நிர்வாகிகள், இதுபோல பொதுநல வழக்கை தாக்கல் செய்ய முடியாது. இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டும் தீர்ப்புகள் பல அளித்துள்ளன‘ என்று வாதிட்டார்.

மனுதாரர் தரப்பிலும் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், ‘மனுவை தள்ளுபடி செய்தும், மனுதாரருக்கு ரூ.50 ஆயிரம் வழக்கு செலவு (அபராதம்) விதித்தும், அந்த தொகையை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பொது நிவாரண நிதிக்கு 4 வாரத்தில் செலுத்த வேண்டும்’ என்றும் உத்தரவிட்டனர்.

Next Story