எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா பரிசோதனை - அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தகவல்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றதாக அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சென்னை,
தமிழகத்தின் கொரோனா தாக்கம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் அதிக தொண்டை சளி மற்றும் ரத்த பரிசோதனை செய்யும் வகையில் இதுவரை 46 அரசு பரிசோதனை மையம் மற்றும் 41 தனியார் பரிசோதனை மையம் என மொத்தம் 87 கொரோனா பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த பரிசோதனை
மையங்களில் 24 மணி நேரமும் 3 ‘ஷிப்ட்’ அடிப்படையில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இதன்மூலம் நாள் ஒன்றுக்கு சராசரியாக 30 ஆயிரம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் மற்ற மாநிலங்களைவிட அதிகமாக 9 லட்சத்து 19 ஆயிரத்து 204 பரிசோதனைகள் இதுவரை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 55 சதவீதம் பேர் தற்போது குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். எந்த ஒரு மருந்துமின்றி அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எப்போது முடியும் என்ற கேள்விக்கு, அதீத கடவுள் பக்தி கொண்ட முதல்- அமைச்சர் யதார்த்தமாக கடவுளுக்குத்தான் தெரியும் என்று பதில் கூறினார். கடவுள் என்ற வார்த்தையால் எதிர்கட்சி தலைவருக்கு ஏன் கோபம் வருகிறது என்பது தெரியவில்லை.
முதல்-அமைச்சருக்கு பரிசோதனை
தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பு விகிதம் 15 நாட்களுக்கு மேலாகத்தான் உள்ளது. கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இது 6 முதல் 7 நாட்களாக இருந்து வந்தது. இதில் இருந்து தமிழக அரசின் கொரோனா தடுப்பு வியூகம் சரியான பாதையில் தான் செல்கிறது என தெரிகிறது. தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை தற்போது வெற்றி அடைந்துள்ளது. மேலும் உயிர் காக்கும் மருந்துகளும் அதிக அளவில் கொள்முதல் செய்யப்பட்டு மாவட்ட வாரியாக வழங்கப்பட்டு வருகிறது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, அந்த பரிசோதனை முடிவுகளில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது. கொரோனா பாதிப்பு குறித்து இதுவரை எந்த தகவலும் மறைக்கப்படவில்லை. அனைத்து வெளிப்படையாகவே உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story