கொரோனா தடுப்பு பணியில் இரவு, பகல் பாராமல் பாடுபடும் அரசு மீது பழி போடுவதா? - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அறிக்கை


கொரோனா தடுப்பு பணியில் இரவு, பகல் பாராமல் பாடுபடும் அரசு மீது பழி போடுவதா? - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அறிக்கை
x
தினத்தந்தி 23 Jun 2020 8:45 PM GMT (Updated: 23 Jun 2020 8:12 PM GMT)

கொரோனா தடுப்பு பணியில் இரவு, பகல் பாராமல் பாடுபடும் அரசு மீது பழி போடுவதா? என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அறிக்கை விடுத்துள்ளார்.

சென்னை, 

பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உலகளவில் குணப்படுத்துவதற்கு இதுவரையில் மருந்து இல்லாமலும், தடுப்பூசி கண்டறியப்படாமலும், கொரோனா தொற்றுக்கு எதிராக மனித குலம் மன்றாடி வரும் நிலையில் அயராத போராட்டத்தாலும், அறிவார்ந்த முயற்சிகளாலும் அரசியல் கலப்பற்ற, அப்பழுக்கற்ற உழைப்பாலும் கொரோனாவிலிருந்து தமிழக மக்களை தற்காப்பதற்கும், நோயிலிருந்து மீட்பதற்கும், உயிரிழப்பு சதவீதத்தை கட்டுபடுத்துவதிலும் எளிமை சாமானியர் எடப்பாடி பழனிசாமியின் அரசு, இந்திய மருத்துவ கவுன்சில் தொடங்கி, உலக சுகாதார அமைப்பு வரை பாராட்டும் வகையில் பணியாற்றி வருகிறது.

இரவு,பகல் பாராது தொண்டூழியம் செய்து வரும் மருத்துவர்களும், செவிலியர்களும், லட்சோப லட்ச அரசு ஊழியர்களும் மனச்சோர்வு அடையும் விதத்தில் அறிக்கைகள் என்னும் பெயரிலே தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்துகிற அக்கப்போர்கள் ஒட்டுமொத்த மக்களின் முகச்சுளிப்பிற்கு ஆளாகியிருக்கிறது. டெண்டர் விடுவதற்கு முன்பே முறைகேடு என்று அவதூறு வழக்கு தொடுத்து நீதிமன்றத்தில் மூக்கறுபட்ட பிறகும் தி.மு.க. தன் போக்கை நிறுத்திக்கொள்ளவில்லை.

ஒட்டுமொத்த இந்திய தேசமே உள்ளம் திறந்து பாராட்டுகிற அளவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்ததில் வெற்றி, ஜல்லிக்கட்டு உரிமை மீட்டதில் வெற்றி, மீத்தேன் அபாயத்தை போக்கியதில் வெற்றி, மின்மிகை மாநிலமாக ஆக்கியதில் வெற்றி, இரண்டாம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியும், திரைகடல் ஓடி தேன்தமிழ் நாட்டிற்கு திரவியம் தேடுவதிலும் வெற்றி, சட்டம்-ஒழுங்கை காத்ததில் வெற்றி, ஊரடங்கு காலத்திலும் மக்களுக்கு உணவு பஞ்சம் வராமல் பார்த்துக் கொண்டதில் வெற்றி.

இந்திய தேசம் முன்வைத்த விருதுகளில் மூன்றில் ஒரு பங்கிற்கும் மேலாக ஒன்பது விருதுகளை தட்டி வந்து இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலம் தமிழ்நாடு என்னும் பெருமையை ஈட்டியதில் வெற்றி. தொடர்ந்து உணவு தானியம் உற்பத்தியில் தமிழகமே முதலிடம் என்னும் சாதனையில் வெற்றி. இவ்வழியில் கொள்ளை நோய் கொரோனாவுக்கு எதிராக தொண்டாற்றுவதில் இந்தியாவுக்கே வழிகாட்டும் மாநிலம் தமிழ்நாடு என்னும் பெருமையோடு எடப்பாடி பழனிசாமிக்கு மக்களிடம் உயர்ந்து வரும் செல்வாக்கை கண்டு காண பொறுக்காத மு.க.ஸ்டாலின் காழ்ப்புணர்ச்சி காய்ச்சல் எடுத்து கதறுகிறார்.

தெய்வ பக்தி

மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் கொரோனா எப்போது முழுமையாக கட்டுப்படுத்தமுடியும் என்ற அறிக்கைக்கு, முதல்-அமைச்சர் இறைவனுக்குத்தான் தெரியும் என்று பதிலளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். முதல்-அமைச்சர் யதார்த்தமாக இந்த கருத்தை சொல்லி இருக்கிறார். இதற்கு காரணம் உலக சுகாதார அமைப்பு, இந்திய சுகாதாரத்துறை, மருத்துவ நிபுனர்கள், வல்லுனர்கள் அனைவருமே இந்த வைரஸ் தொற்றை ஒழிப்பது குறித்து கால அளவினை குறிப்பிடவில்லை. வைரஸ் தொற்றை ஒழிக்க மருந்தும் கண்டுபிடிக்கவில்லை.

இதனால்தான் முதல்- அமைச்சர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். இதில் என்ன தவறு இருக்கிறது. முதல்- அமைச்சர் தெய்வ பக்தி உள்ளவர். மு.க.ஸ்டாலினுக்கு கடவுள் பெயரை சொன்னாலே கோபம் வரும். இதன் வெளிப்பாடுதான் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை.

இரவு, பகல் பாராது

நல்லவர்கள் என்பதே மருந்துக்கும் இல்லாத நச்சுக்கிருமிகளின் நாற்றங்கால் ஆகிப்போன தி.மு.க. இனியும் மட்டரகமான அறிக்கைகள் விடுத்து மக்களின் வெறுப்புக்கு ஆளாவதை விட்டுவிட்டு தன்னை திருத்திக்கொள்வது உத்தமம். இரவு, பகல் பாராது, இமைகள் சோராது உழைக்கின்ற அரசின் மீது பழிபோடுகின்ற பாவக்காரியம் இனியும் தொடருமானால், கொரோனா ஒழிவதற்கு முன்பே தமிழ்நாட்டு அரசியலில் இருந்து தி.மு.க. அழிந்து போகும் என்பது சத்தியம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story