சாத்தான்குளம் விவகாரத்தில் தேசிய மனித உரிமை ஆணையம் நடவடிக்கை; அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய டி.ஜி.பி.க்கு உத்தரவு


சாத்தான்குளம் விவகாரத்தில் தேசிய மனித உரிமை ஆணையம் நடவடிக்கை; அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய டி.ஜி.பி.க்கு உத்தரவு
x
தினத்தந்தி 2 July 2020 4:09 AM IST (Updated: 2 July 2020 4:09 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளத்தில் தந்தை-மகன் இறந்த விவகாரத்தில் கனிமொழி எம்.பி. புகாரை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட தேசிய மனித உரிமை ஆணையம், அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சாத்தான்குளத்தில் தந்தை- மகன் இறந்த விவகாரத்தில் தவறு செய்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. மகளிர் அணி செயலாளரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு புகார் மனு அனுப்பி இருந்தார்.

அதில், ’தந்தை-மகன் இறந்த விவகாரத்தில் அவர்களை தாக்கிய போலீஸ் அதிகாரிகள், மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட சாத்தான்குளம் அரசு மருத்துவமனை டாக்டர், அவர்களது உடலில் காயங்கள் இருந்த போதிலும் சிறையில் அடைக்க உத்தரவிட்ட சாத்தான்குளம் மாஜிஸ்திரேட்டு, சிறையில் அடைத்த சிறை அதிகாரிகள் ஆகியோர் தங்களது கடமையில் இருந்து தவறி உள்ளனர். இந்த சம்பவத்தில் மனித உரிமை மீறப்பட்டுள்ளது. எனவே, அவர்கள் அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த புகார் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட தேசிய மனித உரிமை ஆணையம், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக போலீஸ் டி.ஜி.பி., தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, சிறைத்துறை ஐ.ஜி. ஆகியோர் 6 வாரத்துக்குள் தங்களது விளக்கத்தை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

மேலும் அந்த உத்தரவில், ‘பிரேத பரிசோதனை அறிக்கை, மருத்துவ சிகிச்சை ஆவணங்கள், சிறையில் அனுமதிக் கப்பட்ட போது அவர்களது உடல்நிலை குறித்த அறிக்கை, மாஜிஸ்திரேட்டு விசாரணை அறிக்கை உள்ளிட்ட இந்த வழக்கில் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்குள் ஆவணங்கள் தாக்கல் செய்யப்படாதபட்சத்தில் டி.ஜி.பி. உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்க நேரிடும்’ என்று கூறப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து கனிமொழி எம்.பி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இப்போதாவது சூழலை உணர்ந்து சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுப்பாரா?’ என கேள்வி எழுப்பி உள்ளார்.

Next Story