தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை சமூக பரவலாக மாறவில்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை சமூக பரவலாக மாறவில்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்
x
தினத்தந்தி 2 July 2020 7:53 PM IST (Updated: 2 July 2020 7:53 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை சமூக பரவலாக மாறவில்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

தமிழகத்தில் இன்று மிக அதிகபட்ச அளவாக ஒரே நாளில் மேலும் 4,343 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 98,392 ஆக உயர்ந்துள்ளதாக, தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், “தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 57 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 1,264ல் இருந்து 1,321 ஆக உயர்ந்துள்ளது என்றும் தெரிவித்தார். மேலும் கொரொனா தொற்றில் இருந்து இன்று 3,095 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று மட்டும் 2,027 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் குணமடைந்து திரும்புவோரின் எண்ணிக்கை 57 சதவீதமாக உள்ளது. அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவரும் 100 நாட்களாக வீதியாக சென்று பணியாற்றுகிறோம். இதுவரை 56,021 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். அனைத்து கருவிகளையும் கொண்ட நவீன ஆய்வகங்களுடன் கூடிய மருத்துவமனை அமைகிறது. அதனை இரண்டு தினங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்” என்று தெரிவித்தார்.

மேலும் “தமிழகத்தில் கொரோனா வைரஸ் சமூகப் பரவலாக இல்லை என்பதை ஐசிஎம்ஆர் ஏற்கெனவே தெரிவித்துவிட்டது. கொரோனா நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் இல்லாதவர்கள் இரண்டு பேரையும் அரசு ஒரே விதமாகத் தான் கவனித்து வருகிறோம். வயதிலேயே மூத்தவர்கள், கேன்சர், இதய நோய் உள்ளவர்கள் போன்றவர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று ஏற்படும் போதுதான் மருத்துவர்களுக்குச் சவாலாக இருக்கிறது என்றார். தமிழகத்தில் 75,000 படுக்கைகள் உள்ளன. நாட்டிலேயே முதல் முறையாக புதிய சிடி ஸ்கேன் உள்ளிட்ட அதிநவீன வசதிகளுடன் கிண்டியில் 750 படுக்கைகள் தயாராகி வருகின்றன. கொரோனா தடுப்பில் பணியாற்றும் முன் களப்பணியாளர்களுக்கு Zinc ஆர்செனிக் ஆல்பம் உள்ளிட்ட மருந்துகள் வழங்கப்படுகின்றன. மேலும் 46 லட்சம் முகக்கவசங்கள் தமிழகத்தில் வழங்கப்பட்டுவிட்டன. முன் களப்பணியாளர்களுக்கான ஒருமாத ஊதியத்திற்கான பணிகள் நடந்து வருகின்றன.  தமிழகத்தைப் பொறுத்தவரை மாவட்ட வாரியாக எவ்வளவு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதையும் வெளிப்படையாகத் தெரிவிக்கிறோம். தமிழகத்தில் 12,000க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள்., 250க்கும் மேற்பட்ட வாகனங்கள் கொரோனா பணியில் இருக்கிறது. மேலும் ரெமிடெசீவர் மருந்தைத் தமிழ்நாடு அரசு பெற்றுள்ளது. கொரோனாவிலிருந்து உயிர்காக்கும் 3 வகை மருந்துகள் தமிழகத்தில் உள்ளன” என்று கூறினார். 

Next Story