பொதுமக்கள் குறைகளை ‘வீடியோ கால்’ மூலம் என்னிடம் தெரிவிக்கலாம் - சென்னை புதிய போலீஸ் கமிஷனர் அதிரடி அறிவிப்பு


பொதுமக்கள் குறைகளை ‘வீடியோ கால்’ மூலம் என்னிடம் தெரிவிக்கலாம் - சென்னை புதிய போலீஸ் கமிஷனர் அதிரடி அறிவிப்பு
x
தினத்தந்தி 3 July 2020 4:31 AM IST (Updated: 3 July 2020 4:31 AM IST)
t-max-icont-min-icon

சென்னை புதிய போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று பதவி ஏற்றவுடன் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். பொதுமக்கள் தங்களின் குறைகளை ‘வீடியோ கால்’ மூலம் தன்னிடம் தெரிவிக்கலாம் என்று தெரிவித்தார்.

சென்னை,

சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மாற்றப்பட்டார். புதிய போலீஸ் கமிஷனராக மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டார். நேற்று பகல் 11 மணி அளவில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புதிய போலீஸ் கமிஷனர் பதவி ஏற்பு விழா நடந்தது. புதிய போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் காரில் 11 மணி அளவில் கமிஷனர் அலுவலகம் வந்தார். அவருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.

பின்னர் அவர் தனது அலுவலகத்திற்கு வந்தார். அவரை ஏ.கே.விஸ்வநாதன் வரவேற்று முறைப்படி பொறுப்புகளை ஒப்படைத்தார். பின்னர் கமிஷனர் ஆசனத்தில் அமர்ந்து அவர் பதவி ஏற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து ஏ.கே.விஸ்வநாதன் விடைபெற்று சென்றார். அவரை வாசல்வரை சென்று மகேஷ்குமார் அகர்வால் வழி அனுப்பி வைத்தார்.

சென்னை மாநகரின் 107-வது போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்றவுடன் தனது திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து மகேஷ்குமார் அகர்வால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

எனக்கு இந்த பதவியை வழங்கிய முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த பதவியில் இருந்து சென்னை மக்களுக்கு சேவை செய்வேன். சென்னை காவல்துறையில் சுமார் 20 ஆயிரம் காவலர்கள் மற்றும் அதிகாரிகள் பணி செய்கிறார்கள். அவர்களது நலன் காக்கப்படும். கொரோனா பிரச்சினை இருப்பதால் என்னை பொதுமக்கள் சந்திக்க முடியாத நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது குறைகளை ‘வீடியோ கால்’ மூலம் என்னிடம் பேசி தெரிவிக்க ஏற்பாடு செய்வேன். தினந்தோறும் அல்லது வாரத்தில் 2 நாட்கள் ‘வீடியோ கால்’ மூலம் பேச உரிய நேரம் ஒதுக்கப்படும்.

சென்னையில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் குற்றங்கள் குறைந்துள்ளது. சென்னை தெற்கு கூடுதல் கமிஷனராக நான் பதவி வகித்தபோது கேமராக்கள் பொருத்தும் திட்டத்துக்கு நானும் உதவி செய்துள்ளேன். இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். குற்றத்தடுப்பு நடவடிக்கைக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். போலீசாரின் மன அழுத்தத்தைப்போக்க மனரீதியாக பயிற்சி அளிக்கப்படும். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் தங்களை காத்துக்கொள்ள வேண்டும். அதற்கு தேவையான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும். பொதுமக்களும், பத்திரிக்கையாளர்களும் எனக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story