தாளமுத்து, நடராஜன் போன்று ஜெ.அன்பழகன் வரலாற்றில் இடம் பெற்றுவிட்டார் மு.க.ஸ்டாலின் உருக்கமான புகழஞ்சலி உரை


தாளமுத்து, நடராஜன் போன்று ஜெ.அன்பழகன் வரலாற்றில் இடம் பெற்றுவிட்டார் மு.க.ஸ்டாலின் உருக்கமான புகழஞ்சலி உரை
x
தினத்தந்தி 5 July 2020 4:00 AM IST (Updated: 5 July 2020 3:35 AM IST)
t-max-icont-min-icon

தாளமுத்து, நடராஜன் போன்று ஜெ.அன்பழகன் வரலாற்றில் இடம் பெற்றுவிட்டார் என்று மு.க.ஸ்டாலின் உருக்கமான புகழஞ்சலி உரையாற்றினார்.

சென்னை,

தி.மு.க. தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில், மறைந்த சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஜெ.அன்பழகனின் உருவப்படத்தை திறந்து வைத்து புகழஞ்சலி செலுத்தினார். தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர்கள் இ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ், நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, நாடாளுமன்ற தி.மு.க. குழுத் துணைத் தலைவர் கனிமொழி, எம்.பி.க்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன், மாவட்டச் செயலாளர்கள் எஸ்.சுதர்சனம், பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் மற்றும் ஜெ.அன்பழகன் குடும்பத்தினர் பங்கேற்று புகழஞ்சலி உரை நிகழ்த்தினர்.

நிகழ்ச்சியின் போது, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே உரையாற்றினார். அவர் ஆற்றிய உரை வருமாறு:-

எனக்கு அருகில் இருந்து தினமும் செயல்பட்ட பக்கத்து நாற்காலியில் இருந்து பொதுக்கூட்டங்களை நடத்திய என் சகோதரர் ஜெ.அன்பழகனைப் படமாகப் பார்க்க வேண்டி வரும் என்று நிச்சயம் நான் நினைக்கவே இல்லை. காலமெல்லாம் நம்மோடு இருந்து கட்சியை கம்பீரமாக ஆக்கி தோழனாய் வழிகாட்டியாய் வாழ்ந்திருக்க வேண்டிய ஜெ.அன்பழகன் நம்மை எல்லாம் ஏமாற்றிவிட்டுப் போய்விட்டார். இது ஏதோ சென்னை மேற்கு மாவட்டக் கழகத்துக்கு மட்டும் ஏற்பட்ட இழப்பு அல்ல; ஒட்டுமொத்த சென்னைக்கு மட்டும் ஏற்பட்ட இழப்பு அல்ல. கட்சி தலைமைக்கே ஏற்பட்ட இழப்பு. தமிழ்நாட்டுக்கே ஏற்பட்ட இழப்பு. இன்னும் சொல்லப்போனால், தனிப்பட்ட முறையில் எனக்கு ஏற்பட்ட இழப்பு.

கொரோனாவில் இருந்து மக்களைக் காக்கப் போராடியவர். கொரோனாவுக்கே பலியாக வேண்டியதாகிவிட்டது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தாளமுத்துவையும், நடராசனையும் இழந்தோம். இந்தி எதிர்ப்புப் போர்க்களத்தில் விருகம்பாக்கம் அரங்கநாதனை இழந்தோம் என்பதைப் போல கொரோனா எதிர்ப்புப் போரில் ஜெ.அன்பழகனை இழந்தோம் என்று சொல்லும் அளவுக்கு வரலாற்றில் இடம்பெற்றுவிட்டார்.

ஜெ.அன்பழகன் நம்மோடு இருந்து இயக்கிக் கொண்டிருக்கிறார் என்ற எண்ணத்தோடு அனைவரும் செயல்பட வேண்டும். ஜெ.அன்பழகன் குடும்பத்தினர் அனைவருக்கும் என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை. மறைந்த ஜெ.அன்பழகன் உங்கள் குடும்பத் தலைவர் மட்டுமல்ல; எங்கள் அனைவர் குடும்பத்திலும் ஒருவர்.

இவ்வாறு அவர் உரையாற்றினார்.

பின்னர் இந்நிகழ்ச்சிக் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் மு.க.ஸ்டாலின் வெளியிட்டப் பதிவு வருமாறு:-

சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும் மாவீரனுமான தீரன் ஜெ.அன்பழகன் உருவப் படத்தை திறந்து வைத்தேன். காணொலி மூலமாக 1,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அன்புவின் சிரித்த முகத்தை மறக்க முடியாது; அவர் சிந்திய வியர்வையும், ரத்தமும் வீண்போகாது. வாழ்க என் சகோதரன் அன்புவின் புகழ்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜூலை மாதத்திற்கு மட்டும் விலையின்றி அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும்“ என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பது, தொடர்ந்துவரும் ‘கொரோனா ஊரடங்கு‘ துயரத்தின் சோகத்தில் மூழ்கியிருக்கும் ஏழை-எளிய அடித்தட்டு மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமளிப்பதாக இருக்கிறது.

மத்திய அரசே நவம்பர் மாதம்வரை, ஒவ்வொரு மாதமும் 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. ஏழை - எளியவர்களுக்கு அரிசி வழங்குவதில் மட்டும் ஏன் மத்திய அரசின் வழிகாட்டுதல்படி நவம்பர் வரை இலவசமாக வழங்க மறுக்கிறார் முதல்-அமைச்சர்?. மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, அடுத்த ஆண்டு ஜூலை வரை ரேஷனில் இலவசப் பொருள்கள் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறாரே?. ஆகவே, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டிலும் வருகின்ற நவம்பர் மாதம்வரை ரேஷன் கடைகளில் இலவசமாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தற்போது வழங்குவது போலவே வழங்கி, ஏழை எளியவர்களுக்குச் சிறு அளவிலாவது உதவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story