நகராட்சி நிர்வாக ஆணையரக தலைமைப் பொறியாளர் மாற்றம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா? - மு.க.ஸ்டாலின்


நகராட்சி நிர்வாக ஆணையரக தலைமைப் பொறியாளர் மாற்றம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா? - மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 5 July 2020 4:10 PM IST (Updated: 5 July 2020 4:10 PM IST)
t-max-icont-min-icon

நகராட்சி நிர்வாக ஆணையரகத் தலைமைப் பொறியாளர் மாற்றம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை, 

நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தலைமை பொறியாளர் நடராஜன் திடீரென மாற்றப்பட்டது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசின் நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் 'ஸ்மார்ட் சிட்டி' உள்ளிட்ட 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள பணிகளைக் கவனித்து வரும் தலைமைப் பொறியாளர் நடராஜன் திடீரென்று மாற்றப்பட்டு, சட்ட விதிகளுக்கு மாறாக, சென்னை மாநகராட்சியில் அதிகாரமில்லாத பதவியில் அமர்த்தப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.

நடராஜனுக்குப் பதில் சென்னை மாநகராட்சியிலிருந்து புகழேந்தி என்ற முதன்மை தலைமைப் பொறியாளரை நகராட்சிகள் ஆணையரகத்தின் தலைமைப் பொறியாளராக நியமித்துள்ளார் உள்ளாட்சித்துறை அமைச்சர்.

நகராட்சி நிர்வாக ஆணையகரத்தில் உள்ள தலைமைப் பொறியாளர் பதவிக்கு சென்னை மாநகராட்சிப் பொறியாளரை நியமிக்கக் கூடாது என்று தெளிவான சட்ட விதிகள் உள்ளன. இந்த விதியை மீறி - புகழேந்தியைக் கொண்டு வந்தது ஏன்? இப்போது '12 ஆயிரம் கோடி ரூபாய்த்' திட்டத்தை கண்காணித்து வரும் நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தலைமைப் பொறியாளராக புகழேந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை சென்னை மாநகராட்சியிலும், தற்போது நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் கீழும் நடைபெறும் / நடைபெற்றுள்ள ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட 17000 கோடி ரூபாய்த் திட்டங்களில் பல திட்டங்கள், மத்திய அரசு தரும் நிதியுதவியின்கீழ் நடைபெறும் திட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு மதிப்புள்ள திட்டங்களைச் செயல்படுத்துவதற்குத் திரும்பத் திரும்ப 'பணி நீட்டிப்பு' வழங்கி ஒரு தலைமைப் பொறியாளரை- குறிப்பாக புகழேந்தியையே நியமித்துக் கொண்டிருப்பதன் உள்நோக்கம் என்ன?

தமிழ்நாடு முழுவதும் நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளின் டெண்டர் பணிகளை கவனிக்கும் பொறுப்பில் இருந்த நடராஜனை சென்னை மாநகராட்சிக்கு மாற்றி, அங்கு தர நிர்ணய தலைமைப் பொறியாளர் பதவியில் அதிகாரம் இல்லாமல் அமர்த்தியிருப்பதன் நோக்கம் என்ன?

"எந்த விசாரணைக்கும் தயார்" என்று அடிக்கடி பேட்டியளித்து வரும் முதலமைச்சர் திரு. பழனிசாமி- இந்த 17 ஆயிரம் கோடி ரூபாய்த் திட்டங்கள் குறித்தும்- நடராஜனின் மாறுதல், புகழேந்தியின் தொடர் பணி நீட்டிப்பு, நியமனங்கள் ஆகியவை குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா என்று கேட்க விரும்புகிறேன்.

ஒருவேளை முதல்வர் பழனிசாமி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடத் தயங்கினால், இத்திட்டங்களில் மத்திய அரசின் நிதியுதவி இருப்பதால், பணி நீட்டிப்பு பெற்ற அதிகாரியை வைத்து இந்த முக்கியத் திட்டங்களை நிறைவேற்றுவது குறித்து சிபிஐ விசாரணை நடத்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Next Story