வெளிநாடுகளில் சிக்கியுள்ளவர்களுக்காக இந்திய தூதரகங்கள் சமுதாய நல நிதியை ஏன் பயன்படுத்தவில்லை? மத்திய அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி


வெளிநாடுகளில் சிக்கியுள்ளவர்களுக்காக இந்திய தூதரகங்கள் சமுதாய நல நிதியை ஏன் பயன்படுத்தவில்லை? மத்திய அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 7 July 2020 10:15 PM GMT (Updated: 7 July 2020 9:01 PM GMT)

வெளிநாடுகளில் சிக்கித் தவிப்பவர்களுக்காக இந்திய தூதரகங்களில் உள்ள ‘சமுதாய நல நிதியை’ ஏன் பயன்படுத்தவில்லை என்று மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை,

கொரோனா ஊரடங்கினால் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் தமிழர்களை அழைத்து வரும் விமானங்கள் தமிழக விமான நிலையங்களில் தரையிறங்க அனுமதிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, இந்த விமானங்களுக்கு அனுமதி வழங்க ஆட்சேபனை எதுவும் இல்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்தது. அதேநேரம், வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்டு வர மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்று ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி இருந்தது.

இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், ‘தமிழக விமான நிலையங்களில் தமிழர்கள் வந்து இறங்காததாலேயே, வெளிநாடுகளில் இருந்து தமிழர்கள் தமிழகம் திரும்பவில்லை என்று கூற முடியாது. ஏராளமான தமிழர்கள் அண்டை மாநில விமான நிலையங்கள் வழியாக சொந்த ஊர் திரும்பியுள்ளனர். இதுவரை வெளிநாடுகளில் சிக்கி இருந்த 43 சதவீத தமிழர்கள் திரும்பியுள்ளனர். கடந்த 3-ந்தேதி முதல் வருகிற 11-ந்தேதி வரை வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வர 495 சர்வதேச விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதில் 44 விமானங்கள் தமிழகத்தில் தரையிறங்க உள்ளது‘ என்று தெரிவித்தார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன், ‘வெளிநாடுகளில் இருந்து தமிழகத்தை சேர்ந்த சுமார் 25 ஆயிரம் பேரை மத்திய அரசு அழைத்து வர வேண்டி உள்ளது. வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் சமுதாய நல நிதி என்ற ஒரு நிதி உள்ளது. வேலையிழந்து கடும் சிரமத்தில் உள்ள இந்தியர்களுக்கு உணவு, உறைவிடம் உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்கவும், நாடு திரும்ப ஆகும் செலவுகளுக்காகவும், இந்த நிதியை தூதரக அதிகாரிகள் இதுவரை பயன்படுத்தவில்லை. கடந்த 3 நாட்களில் பிற நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரவேண்டிய விமானங்கள் எந்த ஒரு காரணமும் கூறாமல் ரத்து செய்யப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளில் சிக்கியுள்ள தமிழர்கள் உணவு, உறைவிடம் இல்லாமல் மனஉளைச்சலில் உள்ளதாக தி.மு.க. அலுவலகத்துக்கு போன்

செய்து தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்‘ என்று வாதிட்டார்.

இதையடுத்து இந்த வழக்கை வருகிற 20-ந்தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், ‘வெளிநாடுகளில் சிக்கியுள்ளவர்களுக்காக இந்திய தூதரகத்தில் உள்ள சமுதாய நல நிதியை ஏன் பயன்படுத்தவில்லை?‘ என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி, அதற்கு பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

Next Story