தீர ஆலோசித்து, தரமான கல்வி அனைத்து குழந்தைகளுக்கும் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்- கமல்ஹாசன்
தீர ஆலோசித்து, தரமான கல்வி அனைத்து குழந்தைகளுக்கும் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை:
உலக முழுவதும் கொரோனா வைரஸ் கோரதாண்டவம் ஆடி வருகிறது. இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நாட்டில் மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி நிலையங்கள் என அனைத்தும் மூடப்பட்டது. கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகியும் இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில் மாணவ-மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்துமாறு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆன்லைனில் பாடம் நடத்துவது என்ற அரசின் அறிவிப்பு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு நலனை புறந்தள்ளி உள்ளது என விமர்சனங்கள் வைக்கப்பட்டது. அவர்களிடம் ஸ்மார்ட்போன் மற்றும் கணினி எதுவும் இல்லாத நிலையில் எப்படி ஆன்லைன் வகுப்பு நடத்த முடியும் என கேள்விகள் எழுப்பப்பட்டது.
இதனையடுத்து இதுக்குறித்து தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் கேள்வி கேட்டகப்பட்டது. அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தப்படாது. டி.வி. மூலமாகத்தான் பாடத்திட்டம் கற்பிக்கப்படும். ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு சேனல் என்று 5 தொலைக்காட்சியில் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
அரசு பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்பை வரும் 13 ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைப்பார். பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்ட உடன் ஆன்லைன் கல்வி திட்டம் செயல்பாட்டிற்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், மாணவர்களின் நலனில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து விமர்சனம் செய்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், கல்வி, சராசரி குடும்பத்தின் எதிர்காலக் கனவு.
எதிர்காலம் சிறக்க நம்பியிருக்கும் ஏணி. அரசு இதில் நேற்றொன்று அறிவித்து, இன்று அதை மாற்றி, நாளை திரும்பப்பெறும், தன் வழக்கத்தை விடுத்து தீர ஆலோசித்து, தரமான கல்வி அனைத்து குழந்தைகளுக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனக்கூறி உள்ளார்.
கல்வி, சராசரி குடும்பத்தின் எதிர்காலக் கனவு.
— Kamal Haasan (@ikamalhaasan) July 10, 2020
எதிர்காலம் சிறக்க நம்பியிருக்கும் ஏணி.
அரசு இதில் நேற்றொன்று அறிவித்து, இன்று அதை மாற்றி, நாளை திரும்பப்பெறும்,
தன் வழக்கத்தை விடுத்து தீர ஆலோசித்து, தரமான கல்வி அனைத்து குழந்தைகளுக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
Related Tags :
Next Story