ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் ரூ.2 கோடியில் பிளாஸ்மா வங்கி: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு


ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் ரூ.2 கோடியில் பிளாஸ்மா வங்கி: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
x
தினத்தந்தி 11 July 2020 3:46 AM IST (Updated: 11 July 2020 3:46 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா நோய் தொற்றுக்கு பிளாஸ்மா தெரபி மூலம் சிகிச்சை அளிக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, 

கொரோனா நோய் தொற்றுக்கு பிளாஸ்மா தெரபி மூலம் சிகிச்சை அளிக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ.2 கோடியில் பிளாஸ்மா வங்கி நிறுவப்படுகிறது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா நோய் தொற்றை குணப்படுத்துவதற்கோ, தடுப்பதற்கோ மருந்துகள் எதுவும் இல்லாத சூழலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் ரத்தத்தில் இருந்து பிளாஸ்மாவை பிரித்தெடுத்து அதனை கொரோனா நோயாளிகளுக்கு செலுத்தி குணப்படுத்த சோதனை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து பிளாஸ்மா தொடர்பான ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் மத்திய மருந்து தரக்கட்டுப்பாடு அமைப்பு ஆகியவற்றிடம் தமிழக அரசு அனுமதி பெற்றது. உடனடியாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 20 நபர்களுக்கு சோதனை முறையில் பிளாஸ்மா தெரபி அளிக்கப்பட்டு இதுவரை 18 நபர்கள் முழுவதும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கொரோனா நோய் தொற்றில் இருந்து குணமடைந்த நோயாளிகளிடம் இருந்து ரத்த கூறுகளை தனியாக பிரித்தெடுக்கும் கருவியின் மூலம் 500 மில்லி லிட்டர் பிளாஸ்மா பெறப்பட்டு நோய் பாதிப்பு மிதமாக உள்ளவர்களுக்கு பிளாஸ்மா வழங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பிளாஸ்மா தானம் செய்பவர்கள் 18 முதல் 65 வயது உடையவர்களாக இருக்க வேண்டும். பிளாஸ்மா தானம் செய்பவர்கள் கொரோனா தொற்று குணமடைந்த பின்பு எடுக்கப்படும் பரிசோதனையில் எதிர்மறையான(நெகட்டிவ்) பரிசோதனை முடிவு பெறப்பட்ட நாளில் இருந்து 14-வது நாள் பிளாஸ்மா தானம் செய்வதற்கு தகுதி உடையவர்கள் ஆவர்.

ஒரு முறை பிளாஸ்மா தானம் செய்தவர் 28 நாட்கள் இடைவெளி விட்டு 2-வது முறை தானம் செய்யலாம். ஒரு நபர் அதிகபட்சமாக 2 முறை மட்டுமே பிளாஸ்மா தானம் வழங்க இயலும். தானமாக பெறப்பட்ட பிளாஸ்மா 40 டிகிரி செல்சியஸ் குளிர் நிலையில் ஓராண்டு வரை பாதுகாக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவைப்படும் போது பயன்படுத்தி கொள்ளலாம்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்துகள் பலனளிக்காத போதும், ஆக்சிஜன் தேவை தொடர்ந்து அதிகரிக்கும் போதும், பிளாஸ்மா தெரபி அளிப்பதன் மூலம் நோயில் இருந்து குணமடைவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கி ரூ.2 கோடி மதிப்பில் நிறுவ துரித நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. இந்த பிளாஸ்மா வங்கி, டெல்லிக்கு அடுத்தபடியாக இந்தியாவிலேயே 2-வது பிளாஸ்மா வங்கியாக அமையும். ஐ.சி.எம்.ஆர். ஒப்புதலுடன் மதுரை ராஜாஜி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒரு நபருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்து உள்ளார்.

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இந்த ஆராய்ச்சி வெகு விரைவில் மேற்கொள்ளப்படும். மத்திய அரசின் மருந்து கட்டுப்பாடு ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, தேவையான கருவியின் உரிமம் பெற்ற ரத்த வங்கிகள் பிளாஸ்மா தானம் பெறுவதற்கு அனுமதிக்கப்படுகிறது. இதன்மூலம் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஓமந்தூரார் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம், திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலும் விரைவில் பிளாஸ்மா தானம் பெறப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story