இன்று தளர்வு இல்லா முழு ஊரடங்கு: டாஸ்மாக் மதுக்கடைகளில் அலைமோதிய மதுபிரியர்கள்


இன்று தளர்வு இல்லா முழு ஊரடங்கு: டாஸ்மாக் மதுக்கடைகளில் அலைமோதிய மதுபிரியர்கள்
x
தினத்தந்தி 12 July 2020 4:20 AM IST (Updated: 12 July 2020 4:20 AM IST)
t-max-icont-min-icon

இன்று தளர்வு இல்லா முழு ஊரடங்கு உத்தர அமல்படுத்தப்படுவதையொட்டி, சென்னையை ஒட்டி உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் மதுபிரியர்கள் அதிக அளவில் குவிந்தனர்.

சென்னை, 

இன்று தளர்வு இல்லா முழு ஊரடங்கு உத்தர அமல்படுத்தப்படுவதையொட்டி, சென்னையை ஒட்டி உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் மதுபிரியர்கள் அதிக அளவில் குவிந்தனர். ஆனால், குறைந்த விலையிலான மது பாட்டில்கள் கிடைக்காததால் பெரும்பாலான மதுபிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

தமிழகம் முழுவதும் இன்று(ஞாயிற்றுக்கிழமை) தளர்வு இல்லாத முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. பாலகங்கள் மற்றும் மருந்தகங்கள் தவிர்த்து வேறு எந்த கடைகளும் திறக்கப்படமாட்டாது. அதன்படி, டாஸ்மாக் மது கடைகளும் இன்று திறக்கப்படாது.

சென்னையில் கொரோனா தொற்று அதிக அளவில் இருப்பதால் இதுவரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. எனினும் சென்னையில் உள்ள மதுபிரியர்கள் சென்னையை அடுத்து உள்ள பகுதிகளில் சென்று அங்குள்ள டாஸ்மாக் கடைகளில் இருந்து தங்களுக்கு தேவையான மது பாட்டில்களை வாங்கிச் செல்வது வழக்கம். அதன்படி நேற்றும் சென்னையை அடுத்த தாமரைப்பாக்கம், செவ்வாய்ப் பேட்டை, வேப்பம்பட்டு, காரனோடை, அருமந்தை, புதுவாயில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ‘மதுபிரியர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

தாமரைப்பாக்கம் டாஸ்மாக் கடையில் மதுபிரியர்கள் கூட்டத்தை சமூக இடைவெளியுடன் வரிசை படுத்துவதற்காக கம்புகளை கொண்டு வரிசைகள் அமைக்கப்பட்டதுடன் இடையில் யாரும் புகுந்துவிடக்கூடாது என்பதற்காக ஒடை முள்ளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. மேலும், வரிசையில் நிற்பவர்கள் சமூக இடைவெளியுடன் நிற்பதற்காக ஒவ்வொரு நபருக்கும் குறுக்கே குறுக்கு கம்புகள் கொண்டு அடைக்கப்பட்டு இருந்து. பொதுவாக கூலி வேலை பார்ப்பவர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் தான் அதிக அளவில் டாஸ் மாக் கடைகளில் சென்று மது அருந்துவது வழக்கம்.

இந்த நிலையில் மதுபிரியர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டாலும், ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பெரிதும் வாங்கி அருந்தும் ரூ.120 மற்றும் ரூ.140-க்கு கிடைக்கும் குவாட்டர் பாட்டில்கள் பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் கிடைக்கவில்லை.

குறைந்தபட்சம் 250 ரூபாய் விலை உள்ள குவாட்டர் பாட்டில்கள் மட்டுமே இருந்தது. இது குறைந்த விலையிலான குவாட்டர் பாட்டில்களை வாங்க வந்த மதுபிரியர்களிடையே பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இதில் பெரும்பாலான மதுபிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

அவ்வாறு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற மதுபிரியர்கள் சிலர், “கொரோனா தடுப்பு பணிகளுக்கு பணம் அதிகம் தேவைப்படுவதால், நம்மிடம் இருந்து பணத்தை பிடுங்குவதற்காக இது போன்று குறைந்த விலை பாட்டில்களை விற்பனை செய்யாமல் அதிக விலை மதுபாட்டில்களை விற்பனை செய்கின்றனர்” என்று கூறிச் சென்றதையும் பார்க்க முடிந்தது.


Next Story