சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு குறித்து சி.பி.ஐ. விசாரணை தீவிரம்


சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு குறித்து சி.பி.ஐ. விசாரணை தீவிரம்
x
தினத்தந்தி 12 July 2020 11:01 AM IST (Updated: 12 July 2020 12:44 PM IST)
t-max-icont-min-icon

சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை செய்ய நெல்லை விருந்தினர் மாளிகையில் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

நெல்லை,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கை மீறி கடை திறந்து வைத்ததாக கூறி போலீசார் அழைத்து சென்று தாக்கினார்கள். பின்னர் கோவில்பட்டி ஜெயிலில் அடைக்கப்பட்ட 2 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10 போலீசாரை கைது செய்தனர்.  மேலும், சி.பி.சி.ஐ.டி. போலீசார் சாத்தான்குளம் போலீஸ் நிலையம், அரசு ஆஸ்பத்திரி, கோவில்பட்டி ஜெயிலில் விசாரணை நடத்தி பல்வேறு ஆவணங்களை சேகரித்தனர்.

இதற்கிடையே, இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. இதன்படி, இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.  நேற்று காலையில் சி.பி.ஐ. கூடுதல் சூப்பிரண்டு விஜயகுமார் சுக்லா தலைமையிலான 6 பேர் 2 குழுக்களாக பிரிந்து 2 கார்களில் நெல்லையில் இருந்து காலை 10 மணி அளவில் சாத்தான்குளம் புறப்பட்டனர். அவர்கள் 11.30 மணிக்கு சாத்தான்குளம் போய் சேர்ந்தனர். அங்கு ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் வீட்டிற்கு சி.பி.ஐ. அதிகாரிகள் சென்றனர்.

அங்கு இருந்த ஜெயராஜ் குடும்பத்தினரை தவிர மற்ற அனைவரும் வெளியில் அனுப்பப்பட்டனர். வீட்டில் இருந்தவர்களின் செல்போன்கள் அனைத்து வைக்கப்பட்டு இருந்தது. பின்னர் சி.பி.ஐ. அதிகாரிகள் வீட்டின் கதவை மூடினார்கள். வீட்டில் ஜெயராஜின் மனைவி செல்வராணி, மகள்கள் பெர்சி, பியூலா, அபிஷா, ஜெயராஜின் சகோதரி ஜெயா, அவரது கணவர் ஜோசப், உறவினர் ஜெயசிங் ஆகியோர் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரிடமும் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கில் சிபிஐ விசாரணை தீவிரம் அடைந்துள்ள நிலையில், சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை செய்ய நெல்லை விருந்தினர் மாளிகையில் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.  அறை எண் 5-இல் அமைக்கப்பட்ட அலுவலகத்தில் ஏ.டி.எஸ்.பி உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Next Story