மதுரையில் மேலும் 2 நாட்கள் முழு ஊரடங்கு நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு


மதுரையில் மேலும் 2 நாட்கள் முழு ஊரடங்கு நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 13 July 2020 4:12 AM IST (Updated: 13 July 2020 4:12 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மதுரையில் மேலும் 2 நாட்கள் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

சென்னை, 

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மதுரையில் மேலும் 2 நாட்கள் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுக்க அ.தி.மு.க. அரசு, தொடர்ந்து தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வரும் நிலையில், மதுரை மாவட்டத்தில் நகர்புறப் பகுதிகளில் கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வந்த காரணத்தால், மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாரங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கடந்த மாதம் 24-ந்தேதி முதல் கடந்த 30-ந்தேதி வரை 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்த முழு ஊரடங்கு உத்தரவானது முதலில் கடந்த 5-ந்தேதி வரையும், அதன் பின்னர் 12-ந்தேதி (நேற்று) நள்ளிரவு வரையும் நீட்டித்து ஆணையிடப்பட்டது. இந்த முழு ஊரடங்கின் காரணமாக மதுரை மாவட்டத்தில் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த காய்ச்சல் முகாம்கள் மற்றும் வீடுதோறும் நடைபெற்று வரும் ஆய்வு ஆகியவை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் மேற்கண்டபகுதிகளில் முழு ஊரடங்கினை மேலும் 2 நாட்கள் நீட்டித்தால், தற்போது நடைபெற்று வரும் தீவிர பணிகள் மூலமும், காய்ச்சல் முகாம்களின் எண்ணிக்கையை அதிகரித்து நோய்த் தொற்று உள்ளவர்கள் அனைவரையும் கண்டறிந்து, நோய்தொற்றினைக் கட்டுப்படுத்த ஏதுவாக அமையும் என்பதால் மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாரங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும், 14-ந்தேதி (நாளை) நள்ளிரவு 12 மணி முடிய முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.

முழு ஊரடங்கு உத்தரவு காலத்தில், ஏற்கனவே அமலில் உள்ள கட்டுப்பாடுகளும், தளர்வுகளும் தொடரும் என்றும் அறிவிக்கப்படுகிறது. முழு ஊரடங்கு 14-ந்தேதி வரை அமலில் உள்ள மதுரை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில், 15-ந்தேதி அதிகாலை 12 மணி முதல் 31-ந்தேதி நள்ளிரவு 12 மணிவரை, இப்பகுதிகளில் கடந்த மாதம் 24-ந்தேதிக்கு முன்னர் இருந்த ஊரடங்கின் நிலை மீண்டும் அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்படுகிறது.

இந்த நடவடிக்கையின் காரணமாக மதுரை மாவட்டத்தில், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை கட்டுப்படுத்த வாய்ப்புகள் ஏற்படும் என்பதால், பொதுமக்கள் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story