கூட்டுறவு வங்கிகளில் நகை கடன்கள் வழங்குவது திடீர் நிறுத்தம் - விவசாயிகள், பொதுமக்கள் கடும் பாதிப்பு
கூட்டுறவு வங்கிகளில் நகை கடன்கள் வழங்குவது முன்னறிவிப்பு இன்றி திடீரென நிறுத்தப்பட்டுள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
சென்னை,
மாநிலம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளின் சார்பில் குறைந்த வட்டியில் பொது நகைக்கடன், விவசாய நகைக்கடன்கள் வழங்கப்பட்டு வந்தது. கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பவர்களுக்கு கூட்டுறவு வங்கிகளின் சார்பில் வழங்கப்பட்டு வந்த நகை கடன்கள் ஆதரவு கரத்தை நீட்டுவதாக இருந்தது.
இந்தநிலையில் கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும் நகை கடன்களை மறு உத்தரவு வரும் வரையிலும் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த விபரங்கள் கூட்டுறவுத்துறை கூடுதல் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து மாவட்ட இணைப்பதிவாளர்களுக்கு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மூலம் செல்போனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பேரிடர் காலத்தில் விவசாயிகள், வியாபாரிகள், சிறு தொழில் முனைவோர் உள்ளிட்ட ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர். இந்தநிலையில், அவர்கள் நகை கடன்கள் மூலம் ஓரளவு தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இதையும் பறிக்கும் வகையில் தற்போது நகை கடன்கள் முன்னறிவிப்பு இன்றி நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் விவசாயிகள், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடும் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களுடைய நெருக்கடியை மேலும் அதிகரித்துள்ளது. கூட்டுறவு வங்கிகளில் குறைந்த வட்டியில் வழங்கப்படும் நகை கடன்கள் நிறுத்தி வைக்கும் பட்சத்தில் தனியார் அடகு கடைகள், கந்துவட்டிக்கு கொடுப்பவர்களிடம் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் சிக்கி தவிக்கவேண்டிய நிலை ஏற்படும். எனவே நிறுத்தி வைக்கப்பட்ட நகை கடன்களை மீண்டும் வழங்கவேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தி.மு.க. கண்டனம்
கூட்டுறவு வங்கிகளில் நகை கடன்கள் நிறுத்தி வைக்கப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தி.மு.க. விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க. அரசின் நிர்வாக திறனற்ற செயல்பாடுகளால் கூட்டுறவு சங்கங்கள் அழியும் நிலை ஏற்படுகிறதோ? என்ற ஐயப்பாடு ஏற்படுகிறது. தமிழகத்தின் பெரும்பான்மையான கிராமப்புறங்களில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. தி.மு.க. ஆட்சியில் ஏழை-எளிய பாமர மக்களுக்காகவும், விவசாயிகளுக்காகவும், விவசாய தொழிலாளர்களுக்காகவும், மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்காகவும் ஏற்படுத்தப்பட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகளை எங்கள் ஆட்சியில் செயல்படுத்தியது போலவே நடைமுறைப்படுத்தி, அங்கு வழங்கப்படும் கடன்களுக்கான தொகைகளை அதே கிராமப்புற தொடக்க வேளாண் வங்கியில் பணமாக பெற்றுக்கொள்ளவும், அந்த கடன் தவணையை அதே இடத்தில் திருப்பி செலுத்தவும் கிராமப்புற மக்களுக்கு மீண்டும் அனுமதி வழங்கும் வகையில் தமிழக அரசு அரசாணை பிறப்பிக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு
இதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளின் மூலம் வழங்கப்பட்டு வரும் அனைத்து வகையான நகை கடன்களும் முன்னறிவிப்பு ஏதும் இன்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. கொரோனா காலத்தில் விவசாயிகள், வியாபாரிகள், சிறு தொழில் நடத்துவோர் உள்ளிட்ட அனைத்து ஏழை, நடுத்தர மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், நகை கடன்கள் மூலம் ஓரளவு தங்கள் தேவைகளை நிறைவேற்றி வருகின்றனர்.
இதையும் பறிக்கும் வகையில் தற்போது நகைக் கடன்கள் நிறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி வழங்குவது போல 6 சதவீத வட்டியில் நகை கடன்களை கூட்டுறவு வங்கிகளில் தமிழக அரசு தொடர்ந்து வழங்கவேண்டும். சிறுகுறு மற்றும் நடுத்தர விவசாயிகள், சிறு வியாபாரிகள், சாதாரண ஏழை, எளிய மக்கள் வைத்திருக்கிற நகை கடன்களை தள்ளுபடி செய்து, அவர்களது நகையை திருப்பி கொடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story