கல்வி தொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்கு பாடம் - எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்தும் சிறப்பு கல்வி நிகழ்ச்சி ஒளிபரப்பை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
சென்னை,
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கொரோனா தொற்றால் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், கல்வி தொலைக்காட்சியின் வாயிலாக திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரண்டரை மணிநேரம் சிறப்பு கல்வி நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பையும் மற்றும் பிற வகுப்புகளின் பாடங்களுக்கான ஒளிபரப்பையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார்.
பள்ளிக் கல்வித் துறையில் 2020-21-ம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் திட்டத்தையும், மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்களை வழங்கி அவர் தொடங்கி வைத்தார்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 12-ம் வகுப்பு மாணவர்கள் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினிகளில் கல்வி பயில ஏதுவாக மென் உருவிலான பாடங்களை மடிக்கணினிகளில் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் மூலமாக தரவிறக்கம் செய்யும் திட்டத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.
கொரோனா தொற்று காரணமாக 2020-21-ம் கல்வியாண்டிற்கான கல்வி மற்றும் கற்பித்தல் ஆகியவற்றில் ஏற்படும் சிரமங்களை எதிர்கொள்ள தேவையான ஆலோசனைகள் வழங்கிட தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் அறிக்கையை, அந்த வல்லுநர் குழுவின் தலைவரான பள்ளிக் கல்வி ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன், முதல்-அமைச்சரிடம் சமர்ப்பித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தலைமைச் செயலாளர் கே.சண்முகம், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார், பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் ச.கண்ணப்பன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story