திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 526 பேருக்கு கொரோனா - 13 மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று


திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 526 பேருக்கு கொரோனா - 13 மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று
x
தினத்தந்தி 16 July 2020 10:45 PM GMT (Updated: 2020-07-17T02:07:04+05:30)

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். திருவள்ளூர் மாவட்டத்தில் 526 பேருக்கு தொற்று ஏற்பட்டது.

சென்னை, 

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் 44 ஆயிரத்து 186 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் 4 ஆயிரத்து 549 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 12 வயதுக்கு உட்பட்ட 251 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 604 முதியவர்களும் உள்ளனர்.

தற்போது தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 56 ஆயிரத்து 369 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 44 பேரும், தனியார் மருத்துவமனையில் 25 பேரும் என 69 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 20 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பட்டியலில் சென்னையில் 23 பேரும், திருவள்ளூரில் 7 பேரும், மதுரையில் 5 பேரும், வேலூர், செங்கல்பட்டில் தலா 4 பேரும், காஞ்சீபுரம், தேனி, திருச்சி, விழுப்புரத்தில் தலா3 பேரும், விருதுநகர், தூத்துக்குடி, சேலத்தில் தலா இருவரும், திருவண்ணாமலை, தஞ்சாவூர், சிவகங்கை, புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, கரூர், கன்னியாகுமரி, கோவையில் தலா ஒருவரும் இடம்பெற்றுள்ளனர்.

இதுவரையில் கொரோனாவுக்கு 2 ஆயிரத்து 236 பேர் பலியாகி உள்ளனர்.

கொரோனாவில் இருந்து குணம் அடைந்து 5 ஆயிரத்து 106 பேர் நேற்று வீடு திரும்பினர். இதுவரை 1 லட்சத்து 9 ஆயிரத்து 459 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு உள்ளனர். சிகிச்சையில் 46 ஆயிரத்து 714 பேர் உள்ளனர்.

தமிழகத்தில் 54 அரசு நிறுவனங்களும், 53 தனியார் நிறுவனங்கள் என மொத்தம் 107 நிறுவனங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த நிறுவனங்கள் மூலம் தமிழகத்தில் இதுவரை 17 லட்சத்து 9 ஆயிரத்து 459 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது சென்னையில் தொற்று பாதிப்பு குறைந்து வரும் வேளையில் பிற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. அதன்படி 13 மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்டோர் கொரோனா பிடியில் நேற்று சிக்கினர். இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் 526 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர்.

Next Story