மின் கட்டண உயர்வைக் கண்டித்து கறுப்புக்கொடி போராட்டம் - திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு


மின் கட்டண உயர்வைக் கண்டித்து கறுப்புக்கொடி போராட்டம் - திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு
x
தினத்தந்தி 18 July 2020 4:52 PM IST (Updated: 18 July 2020 4:52 PM IST)
t-max-icont-min-icon

மின் கட்டண விவகாரம் தொடர்பாக, வரும் 21 ஆம் தேதி நடைபெறவுள்ள கறுப்புக்கொடி போராட்டத்தில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் பங்கெடுக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் அதிக மின்கட்டணம் வசூலிக்கப்படுவதாக பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டி வரும் நிலையில், வரும் 21 ஆம் தேதி கருப்புக்கொடி போராட்டம் நடைபெற இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கடந்த 16 ஆம் தேதி காணொலி வாயிலாக திமுக நிர்வாகிகள் உடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை, சாத்தான்குளம் விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குதல் உள்ளிட்ட பத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது;-

“மின் கட்டண முறைக்கு எதிரான தீர்மானம் திமுக மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களின் விரிவான ஆலோசனையுடன் நிறைவேற்றப்பட்டது. மத்தியப் பிரதேசம், கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் கொரோனா கால மின் கட்டணச் சலுகையை அளித்துள்ள நிலையில், அதிமுக அரசு மட்டும் மின் கணக்கீட்டின் அடிப்படையில் கட்டணத்தைச் செலுத்தியே ஆக வேண்டும் என்று சுமையை ஏற்றுவது கருணையற்ற போக்காகும்.

இதனைக் கண்டிக்கும் வகையில் வரும் 21-ம் தேதி, செவ்வாய்க்கிழமை அன்று காலை 10 மணி அளவில் தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளின் முன்பும் கறுப்புக் கொடி ஏற்றுவதோடு, கண்டன முழக்கங்களை எழுப்பிப் போராடுவது எனத் தீர்மானிக்கப்பட்டது.

கணக்கீட்டில் ஏற்பட்டுள்ள குழப்பங்களையும், பிழைகளையும் நீக்கி, கொரோனா காலத்தில் அனைத்துத் தரப்பினருக்கும் வருமானம் குறைந்துள்ள சூழலில் மின் கட்டணத்தில் சலுகை அளிக்க வலியுறுத்தியும் வெகுமக்கள் பக்கம் நின்று திமுக போராடுகிறது. வரும் 21 ஆம் தேதி ஒவ்வொரு வீட்டிலும் கறுப்புக் கொடி பறந்திடும் வகையில் மக்களின் பங்கேற்பு அமைந்திட வேண்டும். போராட்டத்தின் நோக்கம், அதில் எழுப்பப்பட வேண்டிய முழக்கங்கள் ஆகியவை ஒவ்வொரு மாவட்டக் கழகத்திற்கும் தலைமைக் கழகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா கால ஊரடங்கில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய தனி மனித இடைவெளியுடனும் முகக்கவசம், சானிடைசர் போன்ற பாதுகாப்பு வசதிகளுடனும் பொதுமக்களின் பங்கேற்புடன் மேற்கொள்ளப்படும்” என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Next Story