முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.394 கோடி வரப்பெற்றுள்ளது - தமிழக அரசு தகவல்


முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.394 கோடி வரப்பெற்றுள்ளது - தமிழக அரசு தகவல்
x
தினத்தந்தி 22 July 2020 4:39 PM IST (Updated: 22 July 2020 4:39 PM IST)
t-max-icont-min-icon

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.394 கோடி வரப்பெற்றுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை,

கொரோனா தடுப்பு பணிகளில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த பணிகளில் அரசுக்கு உதவும் வகையில் நிதி அளிக்க விரும்பும் தனியார் அமைப்புகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் முதலமைச்சரின் பொது நிவாரன நிதியில் தங்கள் பங்களிப்பை செய்து வருகின்றனர்.

கொரோனா நிவாரணப் பணிகளுக்காகத் தமிழக அரசின் பொது நிவாரண நிதியில் பல்வேறு தொழில் நிறுவனங்களும், அரசு அமைப்புகளும், பொதுமக்களும், திரைத் துறையினரும் தொடர்ந்து நிதியுதவி வழங்கி வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வந்துள்ள தொகை மற்றும் உதவியவர்கள் குறித்த விவரங்களைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

கடந்த மே 14 ஆம் தேதி வரை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் 367 கோடியே 5 லட்சத்து 38 ஆயிரத்து 343 ரூபாய் வந்திருந்தது. இதன் தொடர்ச்சியாக மே 15 முதல் ஜூலை 21 வரையில் ரூ.10 லட்சத்துக்கு மேல் நிதியுதவி வழங்கியவர்களின் விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

நேற்றைய தினம் (ஜூலை 21) வரையில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பெறப்பட்ட மொத்த தொகை 394 கோடியே 14 லட்சத்து 49 ஆயிரத்து 331 ரூபாய் ஆகும். நிவாரண நிதி அளித்த நிறுவனங்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் சங்கம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மற்றும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்ச் செல்வன் என்பவரின் மகன் செல்வன், மகள் செல்வி ஆகியோர், வறுமையில் வாடும் குழந்தைகளுக்கு 40 நாட்கள் உணவு வழங்குவதற்காக தாங்கள் சேர்த்து வைத்திருந்த 80 ஆயிரம் ரூபாயை வழங்கினர்.

மேலும் சென்னை அசோக் நகர், அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்று வரும் மாணவி லக்‌ஷா, தான் சேமித்து வைத்திருந்த 10 ஆயிரம் ரூபாயை முதலமைச்சரின் பொது நிவாரணநிதிக்கு வழங்கியுள்ளார்.

இந்த சிறிய வயதில், தன்னலம் பாராமல், அர்ப்பணிப்பு உணர்வுடன் பிறர் நலம் பேணும், மாணவச் செல்வங்களின் செயலை முதலமைச்சர் அவர்கள் மனதார பாராட்டுவதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story