ரூ.280 கோடியில் 22 நீர்வள திட்டப்பணிகள்; முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார்


ரூ.280 கோடியில் 22 நீர்வள திட்டப்பணிகள்; முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார்
x
தினத்தந்தி 31 July 2020 10:15 PM GMT (Updated: 2020-08-01T01:14:05+05:30)

தமிழகத்தில் ரூ.280 கோடியில் 22 நீர்வள திட்டப்பணிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடலூர் மாவட்டம் கண்டரக்கோட்டை பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக தலைமைச் செயலகத்தில் நேற்று அடிக்கல் நாட்டினார். புதிதாக கட்டப்படவுள்ள இத்தடுப்பணையின் நீளம் 575 மீட்டர், உயரம் 1.50 மீட்டர் மற்றும் கொள்ளளவு 28.58 மில்லியன் கன அடி ஆகும்.

இதனால் விவசாய உற்பத்தி அதிகரிப்பதோடு குடிநீரின் தரமும் உயரும். அப்பகுதியிலுள்ள 728 ஆழ்குழாய் கிணறுகள் மூலம் 2,912 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

மேலும், திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட 1,602 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில், காட்டூர் தத்தமஞ்ஜி இரட்டை ஏரிகளை இணைத்து, கொள்ளளவை மேம்படுத்தி, நீர்தேக்கத்தை உருவாக்கும் திட்டம், காஞ்சீபுரம் மாவட்டம் பழைய சீவரத்தில் உள்ளாவூர் அருகில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி.

நெல்லை மாவட்டம் நம்பியாற்றின் குறுக்கே கண்ணநல்லூரில் தடுப்பணை கட்டும் பணி, விருதுநகர் மாவட்டம் எஸ்.அம்மாபட்டி மற்றும் வடுகபட்டியில் அர்ஜுனா நதியின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி, கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம் பரம்பிக்குளம் பிரதானக் கால்வாயை மறுசீரமைக்கும் பணி உள்பட மொத்தம் ரூ.280 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டிலான 22 திட்டப் பணிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

பதிவுத் துறை சார்பில் வடசென்னை பதிவு மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள அம்பத்தூர் மற்றும் கொன்னூர் சார்பதிவாளர் அலுவலகக் கட்டிடங்கள், செங்கல்பட்டு பதிவு மாவட்டம் சுங்குவார்சத்திரம், தென்காசி கடையநல்லூர், நெல்லை ராதாபுரம், மதுரையில் (வடக்கு) தாமரைப்பட்டி ஆகிய இடங்களில் சார்பதிவாளர் அலுவலகக் கட்டிடம், திருப்பூர் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாகம், சென்னை பதிவுத் துறை தலைவர் அலுவலகத்தில் கட்டப்பட்டுள்ள இணைப்புக் கட்டிடம், வணிகவரித் துறை சார்பில் தர்மபுரி மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள பாலக்கோடு வணிகவரி அலுவலகக் கட்டிடம் ஆகியவற்றை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.

பதிவுத் துறையில் 143 இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 பேருக்கு பணிநியமன ஆணைகளை அவர் வழங்கினார்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story