கொரோனா நோயாளிகளுக்கு வழங்கும் மருந்து கள்ளச்சந்தையில் விற்பனை; அரசு கடும் எச்சரிக்கை


கொரோனா நோயாளிகளுக்கு வழங்கும் மருந்து கள்ளச்சந்தையில் விற்பனை; அரசு கடும் எச்சரிக்கை
x
தினத்தந்தி 1 Aug 2020 12:31 AM GMT (Updated: 1 Aug 2020 12:31 AM GMT)

கொரோனா பிடியில் இருந்து உயிர்காக்கும் மருந்தை கள்ளச்சந்தையில் விற்று ஏஜெண்டுகள் பலர் கொள்ளை லாபம் சம்பாதிப்பதாக தகவல் வெளியான நிலையில் அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை,

கொரோனாவுக்கான தடுப்பு மருந்தோ அல்லது சிகிச்சைக்கான மருந்தோ கண்டுபிடிக்கப்படாத இந்த சூழ்நிலையில், தொற்று ஏற்பட்ட நோயாளிகளுக்கு தற்போது ‘ரெம்டேசிவிர்’ என்ற வைரஸ் எதிர்ப்பு மருந்து அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த மருந்தை அரசு ஒரு குப்பிக்கு ரூ.3,100 என்ற அளவில் (12 சதவீத ஜி.எஸ்.டி. நீங்கலாக) கொள்முதல் செய்கிறது. இந்த மருந்தின் எம்.ஆர்.பி. விலை ரூ.5 ஆயிரம் (ஜி.எஸ்.டி. சேர்க்காமல்) என விற்பனை செய்யப்படுகிறது.

அரசு மருத்துவமனைகளில் இந்த மருந்து போதுமான அளவில் கிடைத்தாலும், தனியார் மருத்துவமனைகளில் போதிய அளவில் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த குறையை நிறைவு செய்வதற்கு மறைமுக ஏஜெண்டுகள் களம் இறங்கியுள்ளனர்.

எனவே அந்த மருந்தின் விலை 3 மடங்கு ஏற்றப்பட்டு, ரூ.13 ஆயிரம் வரை கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. ‘ரெம்டேசிவிர்’ மருந்துக்காக தவிக்கும் நோயாளிகளுக்கு சில டாக்டர்கள் அந்த ஏஜெண்டுகளின் தொடர்பு நம்பரை அளித்து சொந்தமாக மருந்தை வாங்கச் செய்கின்றனர்.

திருச்சியில் தனியார் மருத்துவமனையில் அந்த மருந்து கிடைக்காத காரணத்தினால் நோயாளி ஒருவர் 6 குப்பி மருந்து வாங்குவதற்கு ஏஜெண்டிடம் ரூ.75 ஆயிரம் செலுத்தி உள்ளார். இதுகுறித்து தகவலறிந்து இந்திய மருத்துவ சங்கத்தின் (தமிழ்நாடு) தலைவர் சி.என்.ராஜா, ‘அந்த ஏஜெண்டிடம் நேரடியாக பேசியுள்ளார். பின்னர் அதுபற்றி சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு மருந்துகள் கட்டுப்பாட்டுத் துறையிடம் புகார் அளித்துள்ளார்.

இதுபற்றி மருந்துகள் கட்டுப்பாட்டுத் துறையின் இயக்குனர் டாக்டர் கே.சிவபாலனிடம் கேட்டபோது, ‘ரெம்டேசிவிர்’ மருந்தை நோயாளிகளுக்கு நேரடியாக விற்பனை செய்யக் கூடாது. இன்னும் சில்லரை விற்பனை சந்தைக்கு அந்த மருந்து வரவில்லை.

அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே அந்த மருந்து கிடைக்கும். அந்த மருந்துக்கு தட்டுப்பாடு இருப்பதாக கூறுவது முற்றிலும் பொய்யானது. இதுபற்றி எந்தவொரு புகாரும் எங்களுக்கு வரவில்லை. தமிழகத்தில் கள்ளச்சந்தையில் அந்த மருந்து விற்கப்படவில்லை. குறிப்பிட்ட சம்பவங்கள் இருந்தால் அரசு நடவடிக்கை எடுக்கும்’ என்று கூறினார்.

ஆனால் மதுரையில் உள்ள ஏஜெண்ட் ஒருவரிடம் பேசியபோது, ‘ரெம்டேசிவிர்’ அல்லது ‘டோசிலிசுமாப்’ மருந்துகளை எவ்வளவு வேண்டுமானாலும், இந்தியாவின் எந்தப் பகுதிக்கும் கூரியரில் அனுப்பி வைக்க முடியும் என்று கூறினார். அதோடு அந்த மருந்துகளை வைத்திருக்கும் படத்தையும் அனுப்பி வைத்துள்ளார்.

தனியார் மருத்துவமனைகள் தான் தங்களின் மிகப் பெரிய வாடிக்கையாளராக உள்ளனர் என்று சில ஏஜெண்டுகள் தெரிவித்தனர்.

மற்றொரு ஏஜெண்ட்டிடம் பேசியபோது, ‘கடந்த 10 ஆண்டுகளாக மருந்துக்கடை நடத்தி வருவதாகவும், நேரடியாக உற்பத்தியாளர்களிடம் இருந்து மருந்தை வாங்கிவிடுவதால், அந்த குறிப்பிட்ட மருந்தை பல தனியார் மருத்துவமனைகள் தன்னிடம் இருந்துதான் கொள்முதல் செய்வதாகவும் குறிப்பிட்டார்.

திருச்சியைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், ‘ எனது உறவினர் சிகிச்சை பெற்ற மருத்துவமனையில், அந்த மருந்து வாங்குவதை என்னிடம் ஒப்படைத்தனர். எவ்வளவோ முயற்சித்தும் அதை பெற முடியவில்லை. இறுதியில் அந்த மருத்துவமனையே அந்த மருந்தை வாங்கிக் கொடுத்ததோடு, 3 நாட்கள் சிகிச்சை செலவு என்று ரூ.1.40 லட்சம் கேட்டனர்’ என்று வேதனை தெரிவித்தார்.

இதுபற்றி சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறும்போது, ‘மருந்து தட்டுப்பாடு இருந்தாலும் அதை முன் கூட்டியே மருத்துவ சேவைக் கழகம் வாங்கிவிட்டது. தற்போது போதிய அளவு மருந்து கைவசம் உள்ளது. நோயாளிகளுக்கு ஏற்ப தனியார் மருத்துவமனைகள் எங்களிடமே அதை வாங்கிக்கொள்ளலாம்’ என்று கூறினார். மேலும் கள்ளச்சந்தையில் மருந்து விற்கப்படுவதாக புகார் வந்தால் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

தனியார் மருத்துவமனைகளுக்கு இந்த மருந்து கிடைப்பதற்கு தகுந்த வழிமுறைகளை அரசு வழங்கும் என்று மருத்துவ சேவைக் கழகத்தின் மேலாண்மை இயக்குனர் டாக்டர் பி.உமாநாத் குறிப்பிட்டார்.

Next Story