கடலூர் அருகே தாழங்குடா கிராமத்தில் மோதல் - 6 தனிப்படைகள் அமைப்பு


கடலூர் அருகே தாழங்குடா கிராமத்தில் மோதல் - 6 தனிப்படைகள் அமைப்பு
x
தினத்தந்தி 2 Aug 2020 3:53 AM GMT (Updated: 2020-08-02T09:23:03+05:30)

கடலூர் அருகே தாழங்குடா கிராமத்தில் தேர்தல் முன்விரோதம் காரணமாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.

கடலூர்,

கடலூர் அருகே   தாழங்குடா கிராமத்தில் தேர்தல் முன்விரோதம் காரணமாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.  இந்த மோதலில், இதில் ஒரு தரப்பினர், தாழங்குடா கடற்கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 25-க்கும் மேற்பட்ட படகுகளில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்தனர். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட மீன்பிடி வலைகளுக்கும் தீ வைத்து, விட்டு அந்த தரப்பினர் தப்பி ஓடிவிட்டனர். கடற்கரையோரத்தில் படகுகளும், மீன்பிடி வலைகளும் கொளுந்து விட்டு எரிந்தன.

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனுவாசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். நிகழ்விடத்தில் போலீசார் குவிக்கப்பட்டு பதற்றம் தணிக்கப்பட்டது.

இந்த நிலையில்,  தாழங்குடா கிராமத்தில் நடைபெற்ற மோதல்  தொடர்பாக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் உத்தரவிட்டுள்ளார். மோதலில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து வருவாய் துறையினர், மற்றும் மீன்வளத்துறையினர் கணக்கெடுக்கும் பணியை துவங்கினர். மோதல் தொடர்பாக 60-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


இரு தரப்பினர் இடையே மோதல் ஏன்?


கடலூர் அருகே உள்ள தாழங்குடா கிராமத்தை சேர்ந்தவர் மாசிலாமணி. இவர், குண்டுஉப்பலவாடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தார். தற்போது குண்டுஉப்பலவாடி ஊராட்சி மன்ற தலைவராக மதியழகன் மனைவி சாந்தி உள்ளார். உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாக மாசிலாமணி தரப்பினருக்கும், மதியழகன் தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் மாசிலாமணியின் தம்பியான மீனவர் மதிவாணன்(வயது 36) என்பவர் நேற்று இரவு 9 மணி அளவில் கண்டக்காட்டில் இருந்து தாழங்குடா நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது 2 கிராமத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் 10-க்கும் மேற்பட்ட கும்பல் அரிவாள், உருட்டுக்கட்டை, கத்தி, இரும்பு கம்பி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அவரை வழிமறித்தது.

இந்த கும்பலை பார்த்ததும் மதிவாணன், மோட்டார் சைக்கிளை நடுரோட்டில் போட்டுவிட்டு ஓடினார். உடனே அந்த கும்பல் அவரை விரட்டிச்சென்று சரமாரியாக தாக்கியது. மேலும் அந்த கும்பலில் அரிவாள் வைத்திருந்தவர்கள், மதிவாணனை சரமாரியாக வெட்டினர். இதில் அவரது தலை, கை, கால் ஆகிய பகுதிகளில் வெட்டுக்காயங்கள் விழுந்தன.

உருக்குலைந்து கீழே விழுந்த அவர், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். மதிவாணன் இறந்ததை உறுதி செய்ததும், அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது.

இது பற்றி அறிந்ததும் மாசிலாமணியின் குடும்பத்தினர் மற்றும் அவரது தரப்பினர், அங்கு திரண்டு வந்தனர். மதிவாணன் கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அவர்கள், கதறி அழுதனர். இதனால் ஆத்திரமடைந்த மற்றொரு கும்பல் தாழங்குடா கிராமத்திற்கு சென்று 6 வீடுகளை அடித்து, நொறுக்கினர்.

மேலும் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களை உடைத்து, சேதப்படுத்தி சூறையாடினர். தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களுக்கும் அவர்கள் தீ வைத்தனர். இதை தட்டிக்கேட்டதால் இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.

இதில் ஒரு தரப்பினர், தாழங்குடா கடற்கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 25-க்கும் மேற்பட்ட படகுகளில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்தனர். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட மீன்பிடி வலைகளுக்கும் தீ வைத்து, விட்டு அந்த தரப்பினர் தப்பி ஓடிவிட்டனர். கடற்கரையோரத்தில் படகுகளும், மீன்பிடி வலைகளும் கொளுந்து விட்டு எரிந்தன.

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனுவாசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

இதனை தொடர்ந்து மதிவாணனின் உடலை போலீசார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த கொலையால் தாழங்குடாவில் பதற்றமான சூழல் நிலவியது.

எனவே பாதுகாப்புக்காக மாவட்டத்தின் பல்வேறு போலீஸ் நிலையங்களில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டு, குவிக்கப்பட்டனர். கொலை செய்யப்பட்ட மதிவாணனுக்கு பிரதீமா(29) என்ற மனைவியும், துவாரகா(9) என்ற மகளும், பிரேமேஷ்(5) என்ற மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. எழிலரசன், மாவட்ட வருவாய் அதிகாரி ராஜகிருபாகரன் ஆகியோர் கொலை நடந்த இடத்தை பார்வையிட்டனர். மேலும் தீவைத்து எரிக்கப்பட்ட படகுகள் மற்றும் சூறையாடப்பட்ட வீடுகளையும் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.


Next Story