சிவில் சர்வீசஸ் தேர்வில் இந்திய அளவில் 7-வது இடம் பிடித்த நாகர்கோவில் என்ஜினீயர்


சிவில் சர்வீசஸ் தேர்வில் இந்திய அளவில் 7-வது இடம் பிடித்த நாகர்கோவில் என்ஜினீயர்
x
தினத்தந்தி 4 Aug 2020 7:35 PM GMT (Updated: 2020-08-05T01:05:55+05:30)

சிவில் சர்வீசஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 7-வது இடம் பிடித்து நாகர்கோவில் என்ஜினீயர் சாதனை படைத்தார். அவர் இந்திய வெளியுறவு பணியில் ஈடுபட விரும்புவதாக கூறினார்.

நாகர்கோவில்,

சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் நாகர்கோவில் தளவாய்புரம் பகுதியை சேர்ந்த கணேஷ்குமார் பாஸ்கர் (வயது 27) என்பவர் இந்திய அளவில் 7-வது இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

என்ஜினீயரான இவருடைய தந்தை பாஸ்கர் மத்திய அரசு ஊழியர் ஆவார். நாகர்கோவிலில் பணியாற்றி வருகிறார். இவர்களுடைய சொந்த ஊர் மதுரை.

இதுகுறித்து கணேஷ்குமார் பாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த தேர்வில் நான் அகில இந்திய அளவில் 100 இடங்களுக்குள் வருவேன் என்று எதிர்பார்த்தேன். ஆனால் 7-வது இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தமிழக அளவில் நான் பெற்றுள்ள ரேங்க் குறித்து அறிவிக்கப்படவில்லை.

யு.பி.எஸ்.சி. தேர்வை கடந்த 2018-ம் ஆண்டு முதல் முறையாக எழுதினேன். அப்போது நான் ஒரு தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் உற்பத்தி மேலாளராக பணியாற்றி கொண்டே தேர்வை எழுதினேன். ஆனால் வெற்றி பெற முடியவில்லை. 2-வது முறையாக கடந்த 2019-ம் ஆண்டு இந்த தேர்வை எழுதினேன். தேர்வுக்கு 3 மாதங்களுக்கு முன்பு எனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு, தேர்வுக்கு தயாரானேன். அதில் 7-வது ரேங்க் பெற்று வெற்றி பெற்றுள்ளேன். நான் இந்திய வெளியுறவுப்பணியில் ஈடுபட விருப்பம் தெரிவித்துள்ளேன்.  இவ்வாறு கணேஷ்குமார் பாஸ்கர் கூறினார்.

Next Story