மதுரையில் கொரோனா சிகிச்சைக்கு 1,490 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன; முதல் அமைச்சர் பழனிசாமி பேச்சு


மதுரையில் கொரோனா சிகிச்சைக்கு 1,490 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன; முதல் அமைச்சர் பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 6 Aug 2020 3:39 PM GMT (Updated: 6 Aug 2020 3:39 PM GMT)

மதுரையில் கொரோனா சிகிச்சைக்கு 1,490 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன என தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

மதுரை,

தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா பாதிப்புகள் பற்றி ஆய்வு செய்வதற்காக திண்டுக்கல், மதுரை மற்றும் நெல்லை மாவட்டங்களில் 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.  இதன் ஒரு பகுதியாக அவர் இன்று திண்டுக்கல் சென்று நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்துள்ளார்.  பின்னர் அவர் மதுரைக்கு சென்று நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

அவர் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, மதுரையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.  பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய வீடு வீடாக சோதனை செய்யப்படுகிறது.  பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய படுக்கை வசதி உள்ளது.  அரசின் சிறப்பான நடவடிக்கையால் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.

இன்னும் ஒரு மாதத்தில் ரூ.103 கோடியில் 500 ஆம்புலன்ஸ்கள் வாங்கப்பட உள்ளன.  மதுரை தமுக்கம் மைதானத்தில் கலாசார மையம் அமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது.  கொரோனா நோயாளிகளை குணப்படுத்த பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும்.

காய்ச்சல் முகாம்கள் நடத்துவதுதான் தொற்று குறைய காரணம்.  முகக்கவசம் மற்றும் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளன.  மதுரையில் கொரோனா சிகிச்சைக்கு 1,490 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன என அவர் கூறினார்.

Next Story