கடந்த ஆண்டைவிட அதிகம் பேர் விண்ணப்பம்; என்ஜினீயரிங் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம்


கடந்த ஆண்டைவிட அதிகம் பேர் விண்ணப்பம்; என்ஜினீயரிங் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம்
x
தினத்தந்தி 7 Aug 2020 1:37 AM IST (Updated: 7 Aug 2020 1:37 AM IST)
t-max-icont-min-icon

என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிக மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். ‘கட்-ஆப்’ மதிப்பெண்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

சென்னை, 

என்ஜினீயரிங் படிப்புகளுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை நல்ல வரவேற்பு இருந்தது. அதன்பின்னர், மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வந்தது. இந்தநிலையில் நடப்பு கல்வியாண்டுக்கான (2020-21-ம் ஆண்டு) மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு கடந்த மாதம் 15-ந்தேதி தொடங்கியது.

கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விண்ணப்பப்பதிவு தொடங்கிய முதல் ஒருவாரத்திலேயே மாணவர்கள் பலர் போட்டிப்போட்டு விண்ணப்பிக்கத் தொடங்கினர். அதன்பின்னர், சற்று வேகம் குறைந்திருந்தாலும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்புகளில் விண்ணப்பிக்க அதிக மாணவர்கள் விருப்பம் தெரிவித்து இருப்பதை புள்ளிவிவரங்கள் மூலம் பார்க்க முடிகிறது.

கடந்த ஆண்டை ஒப்பிட்டு பார்க்கையில், விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. கடந்த ஆண்டில் மொத்தமாக ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 116 பேர் விண்ணப்பப்பதிவு செய்திருந்தனர். அவர்களில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 150 பேர் தகுதியுள்ளவர்களாக கருதப்பட்டனர். இதில் 83 ஆயிரத்து 396 பேர் கல்லூரிகளில் சேர்த்து படிப்பை தொடர்ந்து வருகின்றனர்.

ஆனால், இந்த ஆண்டில் இன்னும் விண்ணப்பிக்க 10 நாட்கள் காலஅவகாசம் இருக்கும் நிலையில், கடந்த 5-ந்தேதி நிலவரப்படி ஒரு லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் விண்ணப்பப்பதிவு செய்து இருக்கின்றனர். இவர்களில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களுடைய விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தியுள்ளனர். விண்ணப்பப்பதிவு செய்ய வருகிற 16-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கடைசிநாள் ஆகும். இந்த ஆண்டு 1½ லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பப் பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகளை தேர்வு செய்து விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு ஏதுவாக தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை இணையதளத்தில் கடந்த 2017, 2018, 2019 ஆகிய 3 ஆண்டுகளில் ஒவ்வொரு கல்லூரிகளில், அந்தந்த பாடப்பிரிவுகளுக்கு ஏற்ப பொதுப்பிரிவு, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி.ஏ. போன்ற பிரிவுகளுக்கான ‘கட்-ஆப்’ மதிப்பெண்கள் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதை விண்ணப்பிக்கும் மாணவ-மாணவிகள் www.tneaonline.org என்ற இணையதளத்தில் சென்று பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
1 More update

Next Story