அதிகபட்சமாக 69,697 பேருக்கு பரிசோதனை: தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு தொடர்ந்து 10-வது நாளாக 100-ஐ தாண்டியது


அதிகபட்சமாக 69,697 பேருக்கு பரிசோதனை: தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு தொடர்ந்து 10-வது நாளாக 100-ஐ தாண்டியது
x
தினத்தந்தி 12 Aug 2020 10:45 PM GMT (Updated: 12 Aug 2020 8:32 PM GMT)

தமிழகத்தில் தொடர்ந்து 10-வது நாளாக நேற்று கொரோனா உயிரிழப்பு 100-ஐ தாண்டி உள்ளது. மேலும் நேற்று அதிகபட்சமாக 69 ஆயிரத்து 697 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக 69 ஆயிரத்து 697 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 3 ஆயிரத்து 521 ஆண்கள், 2 ஆயிரத்து 350 பெண்கள் என மொத்தம் 5 ஆயிரத்து 871 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் வெளிநாட்டில் இருந்து வந்த 2 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 25 பேரும், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 265 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 737 பேரும் அடங்குவார்கள். நேற்றும் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதிகபட்சமாக சென்னையில் 993 பேரும், செங்கல்பட்டில் 439 பேரும், திருவள்ளூரில் 407 பேரும், காஞ்சீபுரத்தில் 371 பேரும், கடலூரில் 339 பேரும், கோவையில் 294 பேரும், விருதுநகரில் 292 பேரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தபட்சமாக கிருஷ்ணகிரியில் 6 பேருக்கும், திருவாரூரில் 7 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

தமிழகத்தில் இதுவரை 33 லட்சத்து 10 ஆயிரத்து 36 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 1 லட்சத்து 89 ஆயிரத்து 677 ஆண்கள், 1 லட்சத்து 24 ஆயிரத்து 814 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 29 என மொத்தம் 3 லட்சத்து 14 ஆயிரத்து 520 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 15 ஆயிரத்து 378 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 39 ஆயிரத்து 533 பேரும் அடங்குவார்கள். தமிழகத்தில் தொடர்ந்து 10-வது நாளாக நேற்றும் உயிரிழப்பு 100-ஐ தாண்டியது. அதன்படி அரசு மருத்துவமனையில் 78 பேர், தனியார் மருத்துவமனையில் 41 பேர் என மொத்தம் நேற்று 119 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த வகையில் சென்னையில் 20 பேரும், திருவள்ளூரில் 11 பேரும், கோவை, நெல்லையில் தலா 9 பேரும், திருப்பூரில் 7 பேரும், மதுரை மற்றும் செங்கல்பட்டில் தலா 6 பேரும், திண்டுக்கல், காஞ்சீபுரம், ராணிப்பேட்டை மாவட்டத்தில் தலா 5 பேரும், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரியில் தலா 4 பேரும், விருதுநகர், தென்காசி, சேலத்தில் தலா 3 பேரும், திருச்சி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, பெரம்பலூர், ஈரோட்டில் தலா 2 பேரும், அரியலூர், கடலூர், கரூர், ராமநாதபுரம், சிவகங்கை, திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர், விழுப்புரத்தில் தலா ஒருவரும் என மொத்தம் 29 மாவட்டத்தில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இதுவரை தமிழகத்தில் 5 ஆயிரத்து 278 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 633 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,160 பேரும், செங்கல்பட்டில் 421 பேரும், நெல்லையில் 366 பேரும், காஞ்சீபுரத்தில் 318 பேரும் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை தமிழகத்தில் 2 லட்சத்து 56 ஆயிரத்து 313 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வந்த 865 பேர், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 721 பேர், ரெயில் மூலமாக வந்த 428 பேர், சாலை வழியாக வந்த 3 ஆயிரத்து 813 பேர், கப்பல் மூலமாக வந்த 34 பேர் என இதுவரை 5 ஆயிரத்து 861 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக 2 தனியார் மருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 61 அரசு நிறுவனங்கள், 72 தனியார் நிறுவனங்கள் என 133 நிறுவனங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Next Story