விநாயகர் சிலை விவகாரம் அரசு முடிவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் வழக்குகள் தாக்கல் - ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை


விநாயகர் சிலை விவகாரம் அரசு முடிவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் வழக்குகள் தாக்கல் - ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
x
தினத்தந்தி 18 Aug 2020 2:19 AM IST (Updated: 18 Aug 2020 2:19 AM IST)
t-max-icont-min-icon

விநாயகர் சிலை விவகாரம் அரசு முடிவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் விரைவில் விசாரணைக்கு வர உள்ளன.

சென்னை,

விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட்டு, ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்க அனுமதி வழங்க கோரியும், இந்த தடையை மீறுவோர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் சென்னை ஐகோர்ட்டில் தனித்தனியாக இரு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், அதை ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதற்கு இந்து மத அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தடையை மீறி சிலைகளை அமைப்போம் என்றும் அறிவித்துள்ளனர்.

இந்தநிலையில் சென்னை ஐகோர்ட்டில் இளஞ்செழியன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘ தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 50 ஆயிரம் சிலைகளை நிறுவுவோம் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிவித்துள்ளார். அரசு உத்தரவை மீறி செயல்படுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.” என்று கூறியுள்ளார். இந்த மனு அரசுக்கு ஆதரவாக தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அரசு உத்தரவை எதிர்த்து மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கைவினை காகித கூழ் விநாயகர் சிலைகள் மற்றும் களிமண் பொம்மைகள் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், “ரம்ஜான் பண்டிகைக்கும், தூத்துக்குடி பனிமய மாதா தேவாலயத் திருவிழாவிற்கும் அரசு அனுமதி அளித்ததால், விநாயகர் சதுர்த்திக்கு சிலைகளை வைக்க அனுமதி வழங்கும் என்ற நம்பிக்கையில், கடன் வாங்கி உற்பத்தியாளர்கள் ஏராளமான சிலைகளை செய்து விட்டனர். இப்போது திடீரென அரசு தடை விதித்துள்ளதால், சிலைகள் விற்பனை செய்ய முடியாமல் உற்பத்தியாளர்கள் மிகப்பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும். காகித கூழில் செய்யப்பட்ட இந்த சிலைகளை அடுத்த ஆண்டிற்கு பயன்படுத்த முடியாது. அதனால், விநாயகர் சிலைகளை வைக்கவும், ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் அனுமதிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த 2 மனுக்களும் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
1 More update

Next Story