சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக எஸ்.கவுரி நியமனம்


சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக எஸ்.கவுரி நியமனம்
x
தினத்தந்தி 20 Aug 2020 9:15 PM GMT (Updated: 20 Aug 2020 9:04 PM GMT)

சென்னை பல்கலைக்கழக துணை வேந்தராக பேராசிரியர் எஸ்.கவுரியும், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழக துணை வேந்தராக ஜி.சுகுமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இதற்கான ஆணையை நேற்று அவர்களிடம் வழங்கினார்.

சென்னை,

சென்னை பல்கலைக்கழகம், நாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக இருந்தன. இதைத்தொடர்ந்து, இந்த பணியிடங்களில் தகுதியானவர்களை நியமிக்க 2 பல்கலைக்கழகங்களுக்கும் தனித்தனியாக தேடுதல் குழு அமைக்கப்பட்டது. அந்தக்குழு 2 பல்கலைக்கழகத்துக்கும் துணைவேந்தர் பணிக்கு தகுதியானவர்கள் என தேர்வு செய்த தலா 3 பேர் கொண்ட பட்டியலை கவர்னரிடம் அளித்தது.

அந்த பட்டியலை பரிசீலித்த கவர்னரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான பன்வாரிலால் புரோகித் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக பேராசிரியர் எஸ்.கவுரியையும், மீன்வள பல்கலைக்கழக துணை வேந்தராக ஜி.சுகுமாரையும் நியமித்து உத்தரவிட்டார். இதற்கான நியமன ஆணையை ராஜ்பவனில் நடந்த நிகழ்ச்சியில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று வழங்கினார். இவர்களது நியமனம் அவர்கள் பொறுப்பேற்ற நாளில் இருந்து 3 ஆண்டுகள் அமலில் இருக்கும் என்று அந்த ஆணையில் கூறப்பட்டுள்ளது.

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.கவுரி, சிங்கப்பூரில் உள்ள நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்று 37 ஆண்டுகள் ஆசிரியர் பணியில் உள்ளார். இவர், முன்னதாக சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலைக்கழக மானியக்குழுவின் கீழ் செயல்பட்டு வரும் மல்டி மீடியா கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனராக பணியாற்றி வந்தார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் உற்பத்தி என்ஜினீயரிங் துறையில் கவுரவ பேராசிரியராகவும், ஜெர்மனியில் உள்ள பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகத்தில் வருகை பேராசிரியராகவும், சிங்கப்பூர் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் உற்பத்தி தொழில்நுட்ப கல்வி மையத்தில் ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்துள்ளார்.

94 ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். 30 சர்வதேச கருத்தரங்குகளில் கலந்து கொண்டு 30 ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். 5 புத்தகங்கள் வெளியிட்டுள்ளார். ரூ.25.76 கோடி மதிப்பிலான 18 ஆராய்ச்சி திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். உற்பத்தி என்ஜினீயரிங் துறையில் 13 பி.எச்.டி ஆராய்ச்சி மாணவர்களுக்கும், 2 எம்.எஸ். ஆராய்ச்சி மாணவர்களுக்கும் வழிகாட்டியாக இருந்துள்ளார். சென்னை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழக பதிவாளராகவும் பணியாற்றி உள்ளார். கல்வி தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சிக்காக 12 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள ஜி.சுகுமார், 33 ஆண்டுகள் ஆசிரியர் பணியில் இருந்துள்ளார். முன்னதாக, தூத்துக்குடியில் உள்ள மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மீன் பதப்படுத்தும் தொழில்நுட்பத்துறையில் பேராசிரியராகவும், துறை தலைவராகவும் பணியாற்றி வந்தார். பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டு வரும் புத்தகங்களில் 24 ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். சர்வதேச கருத்தரங்குகளில் 10 ஆய்வு கட்டுரைகளையும், தேசிய கருத்தரங்குகளில் 20 ஆய்வு கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார். 8 புத்தகங்கள் எழுதி உள்ளார். 3 சர்வதேச கருத்தரங்குகளையும், 11 தேசிய கருத்தரங்குகளையும் நடத்தி உள்ளார்.

7 ஆராய்ச்சி திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். 5 ஆராய்ச்சி மாணவர்களை உருவாக்கி உள்ளார். தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம், தமிழ்நாடு ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தின் மீன்வளத்துறை ஆகியவற்றில் டீன் ஆகவும் பணியாற்றி உள்ளார். சிறந்த ஆய்வுக்கட்டுரை விருது, சிறந்த விஞ்ஞானி விருது, சிறந்த ஆசிரியர் விருது, சிறந்த புத்தகத்துக்கான விருது போன்ற பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

Next Story