தி.மு.க. முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் கொரோனா பாதிப்பால் மரணம் - மு.க.ஸ்டாலின் இரங்கல்


தி.மு.க. முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் கொரோனா பாதிப்பால் மரணம் - மு.க.ஸ்டாலின் இரங்கல்
x
தினத்தந்தி 21 Aug 2020 12:00 AM GMT (Updated: 20 Aug 2020 11:31 PM GMT)

தி.மு.க. முன்னாள் அமைச்சர் ரகுமான் கான் கொரோனா பாதிப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 77. அவரது மறைவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சென்னை,

தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்தவர் ரகுமான்கான். இவர் தமிழக அமைச்சரவையில் 1996-ம் ஆண்டு தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்தார். 2 முறை தமிழக சிறுசேமிப்பு திட்ட ஆலோசனைக் குழுத் துணைத் தலைவராகவும் இருந்துள்ளார். இவர், 1970, 1980, 1984 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டமன்ற தேர்தல்களில், சேப்பாக்கம் தொகுதியில் இருந்தும், 1989-ம் ஆண்டு பூங்காநகர் தொகுதியில் இருந்தும், 1996-ம் ஆண்டு ராமநாதபுரம் தொகுதியில் இருந்தும் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வானார்.

தி.மு.க.வில் நட்சத்திர பேச்சாளரான இவர், கட்சியின் உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினராகவும் இருந்து வந்தார். இந்தநிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று காலை சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் மரணம் அடைந்தார். அவரது மறைவு குறித்து தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான அ.ரகுமான்கான் சென்னை தனியார் மருத்துவமனையில் மறைவெய்தினார். அவரது மறைவினையொட்டி,தமிழகம் முழுவதும் 20-8-2020 முதல் 3 நாட்களுக்கு கட்சி அமைப்புகள் அனைத்தும் கட்சிக் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறும், கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் 3 நாட்களுக்கு ஒத்திவைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ரகுமான்கான் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-

தி.மு.க.வின் இடி, மின்னல், மழையில் ஓயாத இடி முழக்கமாகத் திகழ்ந்த, கட்சியின் சிங்கச் சிப்பாய்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சர் மற்றும் உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான ரகுமான்கான் மறைவெய்திவிட்டார் என்ற துயரச் செய்தி கேட்டு பேரதிர்ச்சிக்கும், பெரும் வேதனைக்கும் உள்ளாகி நிற்கிறேன். ஆறுதல் கூறவோ, இரங்கல் தெரிவிக்கவோ ஆற்றலின்றி என் இதயம் அழுகிறது. திறனிழந்து திண்டாடுகிறது. உள்ளம் பதறுகிறது.

ஆற்றல்மிக்க, அன்புமிக்க, இந்த இயக்கத்தின் ஆணிவேர்களில் ஒருவரான அண்ணனை இழந்து பரிதவிக்கிறேன். இயக்கத் தொண்டர்களுக்கு ஆறுதல் சொல்ல இயலாமல் தத்தளித்து நிற்கிறேன். அண்ணனின் மூச்சு நின்று இருக்கலாம். ஆனால் அவரின் முரசொலி கட்டுரைகளும், முழங்கிய மேடைப் பேச்சுகளும் என்றும் நம் கண்களிலே இருக்கும். காதுகளிலே ஒலித்துக் கொண்டே இருக்கும். பாசமிகு அண்ணன் ரகுமான்கானின் குடும்பத்திற்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

தெலுங்கானா மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-

தி.மு.க. முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அரசினர் தோட்ட சட்டமன்ற உறுப்பினர் குடியிருப்பில் குடியிருந்த காலத்தில் இருந்து அண்ணன் ரகுமான்கான் எனது மிக இளம்வயதிலேயே அறிமுகமானவர். அவரின் சிறந்த சொல்லாற்றலையும், செயலாற்றலையும் நான் நன்கு அறிவேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தன்னுடைய ‘டுவிட்டர்’ பக்கத்தில், ‘முன்னாள் தி.மு.க. அமைச்சர் ரகுமான்கான் மாரடைப்பால் மரணம் அடைந்ததற்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். ரகுமான்கான் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற வேண்டுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-

முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் மறைந்தார் என்ற செய்தி அறிந்து தாங்க முடியாத அதிர்ச்சியும், துக்கமும் அடைந்தேன். ரகுமான்கான் மறைவு தி.மு.க.வுக்கு மிகப்பெரிய இழப்பாகும். பாசமும், நேசமும் கொண்டு நான் அவருடன் பழகிய நாட்கள் பசுமையாக மனதில் எழுந்து வாட்டுகின்றன. அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தி.மு.க. தொண்டர்களுக்கும் என் ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலியை மிகுந்த வேதனையோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, சு.திருநாவுக்கரசர் எம்.பி., தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தமிழ் மாநில தேசிய லீக் தலைமை நிலைய செயலாளர் ஜி.சம்சுதீன் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

Next Story