ஊட்டச்சத்து அளவை பூர்த்தி செய்ய சத்துணவு திட்ட மாணவர்களுக்கு கூடுதல் பருப்பு - தமிழக அரசு உத்தரவு


ஊட்டச்சத்து அளவை பூர்த்தி செய்ய சத்துணவு திட்ட மாணவர்களுக்கு கூடுதல் பருப்பு - தமிழக அரசு உத்தரவு
x
தினத்தந்தி 20 Aug 2020 11:45 PM GMT (Updated: 2020-08-21T05:14:57+05:30)

ஊட்டச்சத்து அளவை பூர்த்தி செய்ய சத்துணவு திட்ட மாணவர்களுக்கு கூடுதல் பருப்பு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழக சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை செயலாளர் சோ.மதுமதி வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:-

எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் தொடக்கப்பள்ளி, உயர் தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரிசி, பருப்பு ஆகிய உலர் உணவுப் பொருட்களை (சத்துணவுக்கு பதிலாக) வழங்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசுக்கு சமூக நல ஆணையர் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், தொடக்கப்பள்ளி பயனாளிகளுக்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் அரிசி, பருப்பில் உள்ள கலோரி மற்றும் புரதச்சத்து மத்திய அரசின் ஊட்டச்சத்து அளவுகோலை பூர்த்தி செய்கிறது.

ஆனால் உயர் தொடக்கப்பள்ளி பயனாளிகளுக்கு கலோரி மற்றும் புரதச்சத்து சற்று குறைவாக உள்ளது என்பதால் அவர்களுக்கு வழங்கப்படவுள்ள பருப்புடன் நாளொன்றுக்கு கூடுதலாக 15 கிராம் பருப்பு வழங்கப்பட வேண்டும். அதன் மூலம் மத்திய அரசின் ஊட்டச்சத்து அளவுகோலின்படி உள்ள கலோரி மற்றும் புரதச்சத்து அளவை பூர்த்தி செய்யலாம் என்று கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த மார்ச் மாதத்தில் பள்ளிகள் மூடப்பட்ட நாட்கள் மற்றும் அதற்கு பின் வந்த மாதங்கள் மற்றும் இனி பள்ளிகள் திறக்கப்படும் காலம் வரை அரிசி, பருப்பு ஆகிய உலர் உணவுப் பொருட்களை தொடக்கப்பள்ளி மற்றும் உயர் தொடக்கப்பள்ளி பயனாளிகளுக்கு வழங்க உரிய ஆணையை வழங்க வேண்டும் என்று அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

அந்த வகையில், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு 100 கிராம் அரிசி, 40 கிராம் பருப்பு வழங்கப்படுகிறது. உயர் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு 150 கிராம் அரிசியும், 41 கிராம் பருப்புடன் இனி 15 கிராம் கூடுதலாக சேர்த்து 56 கிராம் பருப்பு வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story