ஆயுஷ்துறை செயலர் மீது பிரதமர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்

தமிழக யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட ஆயுஷ் துறை செயலாளர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
ஆயுஷ் ஹெல்த் மற்றும் வெல்னஸ் சென்டர் என்ற திட்டம் அனைத்து மாநிலங்களிலும் துவங்கப்பட உள்ள நிலையில் அதற்கான ஆன்லைன் பயிற்சி மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் வழங்கப்பட்டது.
கடந்த 20-ஆம் தேதி யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களுக்கு அளிக்கப்பட்ட இந்த பயிற்சியில் தமிழக அரசின் சார்பில் 37 யோகா மருத்துவர்கள் கலந்து கொண்டனர். பயிற்சியின் போது மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளர் வைத்ய ராஜேஷ் கொட்டேச்சா, ஹிந்தி தெரியாதவர்கள் யாரும் ஆன்லைன் பயிற்சியில் பங்கேற்க வேண்டாம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. பயிற்சியில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த மருத்துவர்கள், தங்களுக்கு இந்தி தெரியாது என்று செயலாளரிடம் தெரிவித்தபோது அவர் கோபப்பட்டு இந்தி தெரியாதவர்கள் யாரும் பயிற்சியில் பங்கேற்க வேண்டாம் என தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், ஆயுஷ் துறை செயலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து மு.க ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “ஆன்லைன் பயிற்சியில் பங்கேற்ற 37 தமிழக மருத்துவர்களிடம், இந்தி தெரியவில்லை என்றால் வகுப்பிலிருந்து வெளியேறுங்கள்,என்று, செயலாளர் ராஜேஷ் கொட்டேச்சா என்பவர் ஆணவத்துடனும், இந்தி மொழி வெறியுடனும், மிரட்டல் விடுத்திருப்பதாக” கூறியுள்ளார்.
மேலும், மத்தியில் உள்ள அதிகாரிகளை வைத்து இந்தியைத் திணிப்பது தான் எங்களின் திட்டம் என்ற பாஜக. அரசின் எண்ணத்தை இது வெளிப்படுத்துகிறது என்று ஸ்டாலின் கூறியுள்ளார். இனி இப்படி ஒரு நிகழ்வு எங்கும் நேர்ந்து விடாமல் பிரதமர் உறுதி செய்திட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மாநிலங்களுக்கு இடையே இணைப்பு மொழியாக இருக்கும் ஆங்கிலத்தில் தான், பயிற்சிகள் நடத்தப்பட வேண்டும் என்று முதலமைச்சர் அழுத்தம் கொடுக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
Related Tags :
Next Story