தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வாகனங்கள் படையெடுப்பால் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்
தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வாகனங்கள் படையெடுப்பால் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் எற்பட்டது.
சென்னை,
கொரோனா தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அறிவிக்கப்பட்டு இருந்த இ-பாஸ் நடைமுறை இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இதனால் கொரோனா அச்சம் காரணமாகவும், சென்னையில் தாங்கள் பணிபுரியும் நிறுவனங்கள் மூடப்பட்டதாலும் சொந்த ஊர் சென்ற தென் மாவட்டங்களை சேர்ந்த பெரும்பாலானோர், மீண்டும் சென்னைக்கு திரும்பி வந்த வண்ணம் உள்ளனர்.
ஏற்கனவே சென்னையில் பணிபுரிந்து வருபவர்கள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்காக வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்ற நிலையில், வாரத்தின் முதல் நாளான நேற்று பணிக்கு திரும்பி வந்தனர்.
மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் பெரும்பாலானோர் சென்னைக்கு திரும்பி வந்தனர். இதனால் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதனால் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடங்களான சிங்கபெருமாள் கோவில், மறைமலைநகர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story