மாநில செய்திகள்

சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக சட்டசபை 14-ந்தேதி கூடுகிறது - அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பரிசோதனை + "||" + Tamil Nadu Assembly convenes on 14th at Chennai Kalaivanar Arena - Corona test for Ministers and MLAs

சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக சட்டசபை 14-ந்தேதி கூடுகிறது - அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பரிசோதனை

சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக சட்டசபை 14-ந்தேதி கூடுகிறது - அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பரிசோதனை
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் 14-ந்தேதி தொடங்குகிறது. கொரோனா பரவல் காரணமாக கலைவாணர் அரங்கத்தில் சட்டசபை கூட்டப்பட்டுள்ளது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சென்னை,

தமிழக சட்டசபையில் கடந்த மார்ச் மாதம் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வந்தது. அந்த நேரத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததால், இந்தியா முழுவதும் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது.


எனவே தமிழக சட்டசபையில் நடந்து வந்த பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 23-ந்தேதியன்று அவசர அவசரமாக தள்ளிவைக்கப்பட்டது. அன்று ஒரே நாளில் 17 மானியக் கோரிக்கைகள் மீதான அலுவல்கள் நடந்தேறின. சட்டசபை விதியின்படி 6 மாத கால இடைவெளியில் சட்டசபையை கூட்ட வேண்டும். எனவே இம்மாதம் 24-ந்தேதிக்குள் தமிழக சட்டசபை கூட்டப்பட வேண்டும்.

தற்போது கொரோனா பரவல் குறையாத நிலையில் ஊரடங்கு உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் சட்டசபை கூடும் கோட்டை மைய மண்டபத்தில் சமூக இடைவெளியை கடைபிடித்து சட்டசபையை நடத்த இயலாது. எனவே தமிழக சட்டசபை கூட்டத்தொடரை மாற்று இடத்தில் கூட்ட முடிவு செய்யப்பட்டது.

அந்த வகையில் சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தை சபாநாயகர் ப.தனபால் கடந்த ஆகஸ்டு 22-ந்தேதி நேரில் சென்று ஆய்வு செய்தார்.அதைத் தொடர்ந்து கலைவாணர் அரங்கத்துக்கு தலைமைச் செயலாளர் கே.சண்முகம், சட்டசபை செயலாளர் கி.சீனிவாசன் ஆகியோரும் சென்று பார்வையிட்டனர். அங்கு 3-ம் தளத்தில் இருக்கைகள் போட்டு அளவுகள் எடுக்கப்பட்டன.

அந்த தளத்தில் ஆயிரம் இருக்கைகளை போட முடியும். தற்போது சட்டசபையில் நியமன உறுப்பினரையும் சேர்த்து 232 எம்.எல்.ஏ.க்கள் இடங்கள் உள்ளன. (அ.தி.மு.க. 124, தி.மு.க. 97, காங்கிரஸ் 7, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1, சுயேட்சை 1, சபாநாயகர் 1, நியமன உறுப்பினர் 1) 3 இடங் கள் காலியாக உள்ளன.

அவை தவிர அரசு உயர் அதிகாரிகள், பத்திரிகையாளர்களுக்கும் அவையில் இருக்கை ஒதுக்கப்பட வேண்டும். அந்த வகையில் ஒவ்வொரு இருக்கைக்கும் இடையே குறிப்பிட்ட அளவில் இடைவெளிவிட்டு தேவையான இருக்கைகள் போட முடியுமா? என்று கணக்கிடப்பட்டது.

தற்போது சட்டசபை கூட்டத் தொடரை கலைவாணர் அரங்கத்தில் நடத்தவும், 14-ந்தேதியன்று கூட்டத்தொடரை தொடங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சட்டசபை செயலாளர் கி.சீனிவாசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழக கவர்னர், சட்டசபை கூட்டத்தை இம்மாதம் 14-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை வாலாஜா சாலை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தின் 3-ம் தளத்தில் உள்ள பல்வகை கூட்டரங்கத்தில் கூட்டியுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தற்போது கோட்டை மைய மண்டபத்தில் உள்ள சட்டசபையின் அதே அமைப்பை பின்பற்றி கலைவாணர் அரங்கத்தில் உள்ள கூட்டரங்கில் தற்காலிக சட்டசபை அமைக்கப்படுகிறது. அங்கு சபாநாயகர், முதல்-அமைச்சர், அரசு தலைமைக் கொறடா, எதிர்க்கட்சித் தலைவர், எதிர்க்கட்சிகள் ஆகியோருக்கும் அலுவலக வசதிகள் அளிக்கப்படுகிறது.

சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க வரும் முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்து முடிவை தெரிந்து கொள்வது பற்றி அரசு தீர்மானித்துள்ளது.

இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகளுடன் சட்டசபை செயலக அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளனர். அதில், ஒவ்வொருவருக்கும் இடையே விடப்படும் இடைவெளியின் அளவு, முக கவசம், சானிடைசர் பயன்பாடு போன்ற சுகாதாரம் சம்பந்தப்பட்ட அம்சங்கள் முடிவு செய்யப்படும். இதற்கான அறிவிப்பு தனியாக வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தொடர் நடக்கும் கால அளவு பற்றி முடிவு செய்வதற்காக இம்மாதம் 2-ம் வாரத்தில் (கூட்டத்தொடர் நடக்கும் வாரத்துக்கு முந்தைய வாரம்) ஒரு நாளில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம், சபாநாயகர் ப.தனபால் தலைமையில் கூட்டப்படுகிறது. அதில் எத்தனை நாட்கள் சட்டசபை கூடும், என்னென்ன அலுவல்கள் மேற்கொள்ளப்படும் என்பது பற்றி தீர்மானிக்கப்படும்.

அடுத்த ஆண்டு மே மாதம் நடக்கும் சட்டமன்ற பொதுத்தேர்தலையொட்டி வருவதால், ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு இடையே அரசியல் ரீதியான மோதலை இந்த கூட்டத்தொடரில் எதிர்பார்க்கலாம்.

கொரோனா பரவல் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் இந்த கூட்டத்தொடரில் முன்வைத்து விவாதிக்கப்படும். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை அரசு நினைவு இல்லம் ஆக்குவதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள அவசரச் சட்டம் உள்ளிட்ட அவசரச் சட்டங்கள் தொடர்பான மசோதா இந்த கூட்டத் தொடரில் கொண்டு வரப்படும்.

14-ந்தேதி நடக்கும் முதல் நாள் கூட்டத்தில், மறைந்த எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் (தி.மு.க.) மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. எச்.வசந்தகுமார் (காங்கிரஸ்) மற்றும் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கு முறையே இரங்கல் தீர்மானம் மற்றும் குறிப்புகள் வாசிக்கப்பட்டு சட்டசபை ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளது. கொரோனா பரவல் காலகட்டத்தில் சட்டசபை கூட்டப்படுவதால், பரபரப்பு நிலவுகிறது.