மாநில செய்திகள்

மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 9-ந் தேதி தி.மு.க. பொதுக்குழு கூட்டம் - துரைமுருகன் கட்சியின் பொதுச்செயலாளர் ஆகிறார் + "||" + DMK General Body Meeting led by MK Stalin On the 9th - Duraimurugan is the General Secretary of the party

மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 9-ந் தேதி தி.மு.க. பொதுக்குழு கூட்டம் - துரைமுருகன் கட்சியின் பொதுச்செயலாளர் ஆகிறார்

மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 9-ந் தேதி தி.மு.க. பொதுக்குழு கூட்டம் - துரைமுருகன் கட்சியின் பொதுச்செயலாளர் ஆகிறார்
தி.மு.க. பொதுக்குழு கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 9-ந் தேதி காணொலி காட்சி மூலம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தி.மு.க. பொதுச்செயலாளராக துரைமுருகன் தேர்வு செய்யப்பட உள்ளார்.
சென்னை,

தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்த பேராசிரியர் க.அன்பழகன் (வயது 98) உடல்நல குறைவால் கடந்த மார்ச் மாதம் 7-ந் தேதி உயிரிழந்தார். அவர் கடந்த 1977-ம் ஆண்டு முதல் உயிரிழக்கும் வரை 43 ஆண்டு காலம் தி.மு.க. பொதுச்செயலாளராக பதவி வகித்தார்.


அவரது மறைவுக்கு பின்னர் பொதுச்செயலாளர் பதவி காலியானது. தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்தார். இதற்காக தனது பொருளாளர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் மாதம் 15-ந் தேதி வெளியிட்ட அறிவிப்பில், ‘தி.மு.க. பொதுச்செயலாளர், பொருளாளரை தேர்ந்தெடுப்பதற்காக கட்சியின் பொதுக்குழு கூட்டம் எனது தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மார்ச் 29-ந் தேதி நடைபெறும்’ என்று கூறியிருந்தார். ஆனால் கொரோனா பரவல் காரணமாக அந்த கூட்டம் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூன் மாதம் 3-ந் தேதி வெளியிட்ட அறிவிப்பில், ‘தி.மு.க. சட்ட விதி 18-ன் கீழ் எனக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தின்படி, துரைமுருகன் கொடுத்த ராஜினாமா கடிதத்தின் பெயரில் நான் எடுத்த நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்திவைக்கிறேன். துரைமுருகன் பொருளாளர் பதவியில் தொடர்ந்து நீடிப்பார்’ என்று தெரிவித்தார்.

எனவே தி.மு.க. பொதுக்குழு கூடுவதற்கு மேலும் தாமதம் ஆகலாம் என்று கருதப்பட்டது. தற்போது கொரோனா பரவல் எதிரொலியால் தி.மு.க. நிகழ்ச்சிகள் அனைத்தும் காணொலி காட்சி மூலம் ஒருங்கிணைக்கப்படுகின்றன. கொரோனாவின் வீரியம் இன்னும் குறையாததால், தி.மு.க. பொதுக்குழு கூட்டமும் காணொலி காட்சி வாயிலாகவே நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. பொதுச்செயலாளர், பொருளாளரை தேர்வு செய்வது தொடர்பாக கட்சியின் பொதுக்குழு கூட்டம் 9-ந் தேதி (புதன்கிழமை) காலை 10 மணியளவில் எனது தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும். இதில் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தி.மு.க.வில் துரைமுருகன் தவிர வேறு யாரும் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவிக்கவில்லை. எனவே தி.மு.க. பொதுக்குழுவில் கட்சியின் பொதுச்செயலாளராக துரைமுருகன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

அதே நேரத்தில் பொருளாளர் பதவிக்கு முன்னாள் மத்திய மந்திரிகள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, முன்னாள் அமைச்சர்கள் ஏ.வ.வேலு, பொன்முடி உள்ளிட்டோர் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் காணொலிக்காட்சி வழியாக நாளை நடக்கிறது
மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. நடத்தும் அனைத்துக்கட்சி கூட்டம் காணொலிக்காட்சி வழியாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.