தமிழ்நாட்டில் 7-ந்தேதி முதல் மாவட்டங்கள் இடையே பஸ் போக்குவரத்து; பயணிகள் ரெயில் போக்குவரத்துக்கும் அனுமதி - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


தமிழ்நாட்டில் 7-ந்தேதி முதல் மாவட்டங்கள் இடையே பஸ் போக்குவரத்து; பயணிகள் ரெயில் போக்குவரத்துக்கும் அனுமதி - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 3 Sept 2020 5:26 AM IST (Updated: 3 Sept 2020 5:44 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் வருகிற 7-ந்தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையேயும் பஸ்கள் ஓடும் என்று அறிவித்துள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பயணிகள் ரெயில் போக்குவரத்துக்கும் அனுமதி வழங்கி இருக்கிறார்.

சென்னை,

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் பஸ், ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

பின்னர் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. செப்டம்பர் 1-ந்தேதி முதல் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டு மாவட்டங்களுக் குள் பஸ் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும் என்றும், அனைத்து வழிபாட்டு தலங்களும், வணிக வளாகங்களும் திறக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி, தமிழகத்தில் நேற்று முன்தினம் முதல் அந்தந்த மாவட்டங்களுக்குள் பஸ் போக்குவரத்து தொடங்கியது. தலைநகர் சென்னையிலும் 5 மாதங்களுக்கு பிறகு மாநகர பஸ்கள் ஓடத்தொடங்கின. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட எல்லை வரை மட்டுமே பஸ்கள் ஓடியதால் மற்றொரு மாவட்டத்துக்கு செல்வதில் பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டது.

இதனால் மாவட்டங்களுக் குள் மட்டுமே பஸ்கள் இயக்கப்படும் என்ற அறிவிப்பு, கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது. அருகில் உள்ள மாவட்டத்தில் வேலை பார்ப்பவர் எப்படி செல்ல முடியும்? என்ற கேள்வி எழுந்தது. மேலும் இது கால விரையம், பண விரையம் என பல்வேறு நடைமுறை சிக்கல் களை ஏற்படுத்தும் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தன.

இதற்கு உடனே செவி மடுத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முந்தைய உத்தரவை மாற்றி அமைத்து, வருகிற 7-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் மாவட்டங்களுக்கு இடையேயும் பஸ்கள் ஓடும் என்றும், தமிழகத்துக்குள் பயணிகள் ரெயில் போக்குவரத்தை அனுமதித்தும் நேற்று புதிய அறிவிப்பை வெளியிட்டார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கொரோனா நோய்த்தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 25-ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. கொரோனா நோய்த்தொற்றை தடுக்க பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதுடன், பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக் கத்திலும், பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன் அனுமதி அளித்து உள்ளது.

இந்த வகையில் தற்போது, தமிழ்நாட்டில், மாவட்டத்திற்குள்ளான பொது பஸ் போக்குவரத்து, அனைத்து வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் தரிசனம், வணிக வளாகங்கள், தங்கும் வசதியுடன் கூடிய ஓட்டல்கள், உள்ளிட்டவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, இந்த ஊரடங்கு உத்தரவானது ஒரு சில கட்டுப்பாடுகளுடன் இம்மாதம் 30-ந்தேதி நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது மாவட்டத்துக்குள் மட்டும் பஸ் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு முக்கிய பணி மற்றும் வியாபார நிமித்தமாக சென்று வர போக்குவரத்து வசதி கோரி பொதுமக்களிடம் இருந்து அரசுக்கு கோரிக்கைகள் வந்து உள்ளன.

பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு, நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி 7-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையேயும் அரசு மற்றும் தனியார் பொது பஸ் போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

மேலும், அனுமதிக்கப்பட்ட தடங்களில் மாநிலங்களுக்கு இடையேயான ரெயில் போக்குவரத்துக்கு ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி தற்போது 7-ந்தேதி முதல் மாநிலத்துக்குள் பயணியர் ரெயில் போக்குவரத்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தாலும், பொதுமக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் முககவசம் அணிவது, வீட்டிலும், பணிபுரியும் இடங் களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவுவது, வெளியிடங்களில் சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடிப்பது உள்ளிட்ட அரசு அறிவித்த பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்றினால், இந்த நோய்த் தொற்று பரவாமல் தடுக்க முடியும்.

எனவே பொதுமக்கள் அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறி உள்ளார்.

Next Story