தமிழகத்தை சேர்ந்த மத்திய அரசு அதிகாரிகள் மீது இந்தி திணிப்பு: ஜி.எஸ்.டி. உதவி கமிஷனர் பரபரப்பு குற்றச்சாட்டு
தமிழகத்தை சேர்ந்த மத்திய அரசு அதிகாரிகள் மீது இந்தி திணிக்கப்படுவதாக சரக்கு மற்றும் சேவை வரி உதவி கமிஷனர் பா.பாலமுருகன் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
சென்னை,
சென்னை சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) கமிஷனர் அலுவலகத்தில் (அண்ணாநகர்) உதவி கமிஷனராக பணியாற்றும் பா.பாலமுருகன், மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வரி வாரிய தலைவருக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
நான் சென்னை(புறம்) சரக்கு மற்றும் சேவை வரி கமிஷனர் அலுவலகத்தில் 2019-ம் ஆண்டு நவம்பரில் இருந்து பணிபுரிந்து வருகிறேன். இங்கு நான் திறன் வளர்ப்பு மற்றும் இந்தி(அலுவல் மொழி) பிரிவில் உதவி கமிஷனராக உள்ளேன்.
இந்தி பிரிவில் ஒரு உதவி கமிஷனர், ஒரு கண்காணிப்பாளர், ஒரு ஆய்வாளர் ஆகியோர் பணிபுரிகின்றனர். வேறு ஒரு பிரிவில் பணியாற்றும் குமாஸ்தா ஒருவருக்கும் இந்தி பிரிவில் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.
இந்தி பிரிவின் பணி மத்திய அலுவல் மொழியான இந்தியை பரப்புவதும், அதன் உபயோகத்தை கண்காணிப்பதும் ஆகும். இந்த பணியில் எனக்கு துளியும் விருப்பம் இல்லை.
உதவி கமிஷனரான நானும், கண்காணிப்பாளரான சுகுமாரன் என்பவரும், தமிழ்நாட்டை சேர்ந்த தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள். ஆய்வாளர் ரஞ்சன் தய்யா மற்றும் குமாஸ்தா ஆகியோர் வடமாநிலத்தை சேர்ந்த இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள்.
இந்தி பிரிவில் கோப்புகளில் எழுதப்படும் குறிப்பு மற்றும் கடிதங்களும் இந்தியில் இருக்க வேண்டும் என்பது சட்ட விதி. குறைந்தபட்சம் 50 விழுக்காடாவது இந்தியை உபயோகப்படுத்த வேண்டும்.
உதவி கமிஷனரான எனக்கோ அல்லது கண்காணிப்பாளர் சுகுமாரனுக்கோ இந்தி எழுத படிக்க தெரியாது. கோப்புகளில் எழுதப்படும் குறிப்பு மற்றும் கடிதங்களை ஆய்வாளர் ரஞ்சன் தய்யாவோ அல்லது குமாஸ்தாவோ இந்தியில் எழுதுவார்கள். நாங்கள் அதில் என்ன எழுதி இருக்கிறது என்று தெரியாமல் கையெழுத்திடுவது வழக்கம்.
தற்போது இடமாற்ற உத்தரவின்படி ஆய்வாளர் ரஞ்சன் தய்யா மாற்றப்பட்டு அவருக்கு பதில் தமிழை தாய்மொழியாக கொண்ட விஜயகுமார் என்ற ஆய்வாளர் பொறுப்பு ஏற்க உள்ளார். விஜயகுமாருக்கும் இந்தி எழுதப் படிக்க தெரியாது. எனவே தற்போது இந்தி பிரிவில் உள்ள 3 அதிகாரிகளும் இந்தி எழுதப்படிக்க தெரியாத தமிழ் அதிகாரிகள் ஆவர். எங்களால் கோப்புகள் மற்றும் கடிதங்களை இந்தியில் எழுத முடியாது.
கமிஷனர் அலுவலகத்தில் இந்தியை தாய்மொழியாக கொண்ட ஒரு உதவி கமிஷனர் பணியில் உள்ளார். இந்தி பிரிவு பணியை அவருக்கு ஒதுக்காமல் எனக்கு ஒதுக்கியது திட்டமிட்டு செய்யப்பட்ட ஒரு செயல் ஆகும். இதை என்னுடைய தமிழ் உணர்வை சிறுமைப்படுத்தும் நோக்குடன் செய்துள்ளனர்.
மேலும் இந்த கமிஷனர் அலுவலகத்தில் 3-ல் 2 பேர் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள். அவர்களில் பெரும்பாலானோர் இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள். அவர்களை இந்தி பிரிவில் பணி அமர்த்தாமல் தமிழர்களை இந்தி பிரிவில் பணி அமர்த்தி உள்ளது சரியான செயல் ஆகாது.
இந்தி தெரியாத, இந்தி பிரிவில் வேலை செய்வதற்கு விருப்பம் இல்லாத என்னிடத்தில் அந்த பணியை கொடுப்பது என்பது என் மீது இந்தி மொழியை திணிப்பதாக நான் கருதுகிறேன்.
இந்தியை படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது மட்டும் இந்தி திணிப்பாக இருக்காது. இந்தியை பரப்ப வேண்டும் என்று விருப்பம் இல்லாத ஒருவரை நிர்ப்பந்திப்பதும் கூட இந்தி திணிப்பே ஆகும்.
எனவே மத்திய மறைமுக வரி மற்றும் சுங்கவரி வாரியத்தின் கீழ் உள்ள அனைத்து துறைகளிலும் உள்ள இந்தி பிரிவுக்கு இந்தி எழுதப்படிக்க தெரிந்தவர்கள் மற்றும் அந்த பிரிவில் வேலை செய்வதற்கு நாட்டம் உள்ளவர்கள் மட்டுமே பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிடும்படி தங்களை தாழ்மையுடன் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story