மத்திய ரிசர்வ் படை அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை


மத்திய ரிசர்வ் படை அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
x
தினத்தந்தி 9 Sept 2020 3:39 AM IST (Updated: 9 Sept 2020 3:39 AM IST)
t-max-icont-min-icon

பூந்தமல்லியில் உள்ள மத்திய ரிசர்வ் படையின் பயிற்சி முகாமில் பணியின் போது துணை கமாண்டன்ட் அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பூந்தமல்லி, 

பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 77-வது பட்டாலியன் அமைந்துள்ளது. இங்கு கேரள மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீஜன் (வயது 50), என்பவர் துணை கமாண்டன்ட் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். மேலும் அவர், பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று காலை வழக்கம்போல் பணிக்கு வந்த ஸ்ரீஜன் தனது அலுவலக அறைக்குச் சென்றார். அதன் பின்னர், வெளியே வந்து தனக்கு உரிய ஏ.கே.47 ரக துப்பாக்கியை கையெழுத்திட்டு வாங்கி கொண்டு மீண்டும் தனது அறைக்குள் சென்றார். இதைத்தொடர்ந்து சிறிது நேரத்தில், அவரது அறையில் இருந்து துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது.

இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அங்கு பணியில் இருந்த சக போலீசார், உள்ளே சென்று பார்த்தபோது ஸ்ரீஜன் தனது துப்பாக்கியால் தொண்டை பகுதியில் வைத்து சுட்டுக்கொண்டு ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடந்தார். அவரது தொண்டையில் பாய்ந்த தோட்டா பின் பக்கம் துளைத்து கொண்டு வெளியே வந்து மேலே உள்ள கட்டிடத்தின் மீது பதிந்திருந்தது.

இதையடுத்து உயிருக்கு போராடிய நிலையில் துடித்து கொண்டிருந்த அவரை மீட்டு, சக போலீசார் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் கள் ஸ்ரீஜன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த பூந்தமல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரது அலுவலக அறையில் இருந்து அவர் கையெழுத்துடன் கூடிய ஒரு கடிதம் சிக்கியது. அதில், அவர் தனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என்றும், தனது சொந்த பிரச்சினை காரணமாகவே தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

இது தொடர்பாக பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் தற்கொலைக்கு வேறு காரணங்கள் ஏதாவது உள்ளதா? என்ற கோணத்திலும் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட ஸ்ரீஜனுக்கு நிஷா என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவர் கடந்த 2019-ம் ஆண்டு முதல் கரையான்சாவடியில் உள்ள பயிற்சி மையத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அலுவலக அறையிலேயே துணை கமாண்டர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story