ஆன்லைனில் செல்போன் ‘ஆர்டர்’ கொடுத்தவருக்கு பார்சலில் வந்தது ‘சீட்டுக்கட்டு’


ஆன்லைனில் செல்போன் ‘ஆர்டர்’ கொடுத்தவருக்கு பார்சலில் வந்தது ‘சீட்டுக்கட்டு’
x
தினத்தந்தி 10 Sept 2020 3:30 AM IST (Updated: 10 Sept 2020 3:04 AM IST)
t-max-icont-min-icon

மகளின் படிப்புக்காக ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்தவருக்கு பார்சலில் சீட்டு கட்டுகள் வந்தது. இதனால் ஆத்திரத்தில் டெலிவரி செய்ய வந்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

ஆலந்தூர், 

சென்னையை அடுத்த ஒட்டியம்பாக்கம் வேடந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் முகமது அலி. இவரது முகநூல் பக்கத்தில் வந்த விளம்பரம் ஒன்றை பார்த்தார். அதில் விலை உயர்ந்த செல்போன், குறைந்த விலையில் விற்பதாக கூறப்பட்டு இருந்தது.

இதனை உண்மை என்று நம்பிய முகமது அலி, தனது மகளின் ஆன்லைன் படிப்புக்காக ரூ.2,999 மதிப்புள்ள செல்போன் ஒன்றை கடந்த 2-ந் தேதி ஆர்டர் செய்தார்.

இந்த நிலையில் அவரது முகவரிக்கு செல்போன் பார்சலை டெலிவரி செய்ய வாலிபர் வந்தார். செல்போனுக்கு உரிய பணத்தை பெற்றுக்கொண்டதும் அந்த பார்சலை முகமது அலியிடம் கொடுத்தார்.

அவர் முன்னிலையிலேயே முகமது அலி அந்த பார்சலை பிரித்து பார்த்தார். ஆனால் அந்த பார்சலில் தான் ஆர்டர் செய்த செல்போனுக்கு பதிலாக சீட்டு கட்டுகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர், பார்சலை டெலிவரி செய்ய வந்த வாலிபரை சரமாரியாக அடித்து உதைத்து பள்ளிக்கரணை போலீசாரிடம் ஒப்படைத்தார்.

அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், டெலிவரி கொண்டு வந்த வாலிபருக்கும், அந்த பார்சலை அனுப்பி மோசடி செய்ய முயன்றவர்களுக்கும் தொடர்பில்லை என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இந்த புகாரை சைபர் கிரைம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


Next Story