சிரித்த முகம்தான் எச்.வசந்தகுமார் வெற்றிக்கு காரணம்; நினைவேந்தல் நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் புகழாரம்
சிரித்தமுகம்தான் எச்.வசந்தகுமார் வெற்றிக்கு காரணம் என்றும், முதல்முறையாக நம்மை அழவைத்துவிட்டு சென்றுவிட்டார் என்றும் அவருடைய நினைவேந்தல் நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை,
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த எச்.வசந்தகுமாரின் நினைவேந்தல் நிகழ்ச்சி காணொலி மூலமாக நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நினைவேந்தல் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
எப்போதும் சிரித்த முகம். அதுதான் அவருடைய வெற்றிக்கு காரணம். எல்லா நிறுவனத்துக்கும் ஒரு ‘பிராண்ட்’ வைத்திருப்பார்கள். அந்த பிராண்ட்தான் அந்த நிறுவனத்தின் வெற்றிக்கு காரணம் என்றும் சொல்வார்கள். என்னை பொறுத்தவரையில் ‘வசந்த் அன் கோ’வின் வெற்றிக்கு உண்மையான காரணம், வசந்தகுமார் அவர்களின் அந்த சிரிப்புதான்.
எப்போதும் எந்த சூழ்நிலையிலும் அவர் முகம் சிரித்துக்கொண்டே இருக்கும். அத்தகைய சிரித்த முகத்துக்கு சொந்தக்காரர் முதல்முறையாக நம்மை எல்லாம் அழவைத்துவிட்டுச் சென்றுவிட்டார். இந்தநாட்டு இளைஞர்கள் அவரின் வாழ்க்கையில் இருந்து கற்றுக்கொள்வதற்கு எத்தனையோ கருத்துகள் உண்டு. வசந்தகுமாரின் வாழ்க்கையை படிப்பதன் மூலமாக இளைஞர்கள் மிகப்பெரிய உயர்வை அடைய முடியும் என்று நான் கருதுகிறேன்.
இன்றைக்கு தமிழகம், கேரளா, புதுவையில் மொத்தம் 86 கிளைகள் கொண்ட நிறுவனமாக வசந்த் அன் கோ வளர்ந்துள்ளது என்றால் அதற்கு வசந்தகுமார் என்ற தனிமனிதரின் நம்பிக்கை, உழைப்பு, உற்சாகம் ஆகியவைதான் காரணம். முன்னேறவேண்டும் என்ற ஆசைதான் அவரை இந்த இடத்தில் கொண்டுவந்து நிறுத்தியது.
ஒரு தொழில் தொடங்குவதற்கு நிறைய பணம் இருக்கவேண்டும், அதிகார பலம் இருக்கவேண்டும், உதவி செய்ய நிறைய பேர் இருக்கவேண்டும் என்பது இல்லை; தன்னம்பிக்கையும், வெற்றிபெற வேண்டும் என்ற வெறியும் இருந்தால்போதும் என்பதை வசந்தகுமாரின் வாழ்க்கை காட்டுகிறது. அவரது வாழ்க்கை மட்டுமல்ல; மரணமும் நமக்கு சில பாடங்களை ஏற்படுத்தி இருக்கிறது. அனைவரும் எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் இருக்கவேண்டும்.
தடுப்பூசியும் இல்லை, நோய்வந்தால் சிகிச்சைக்கு மருந்தும் இல்லை என்றநிலையில் நம்மைநாமே காப்பாற்றிக்கொள்ளும் நிலையில் இருக்கிறோம். மத்திய அரசும், மாநில அரசும் மக்களை கைகழுவிவிட்டன. உங்களை நீங்களே காப்பாற்றிக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார்கள். சுகாதார உதவியும் இல்லை, பொருளாதார உதவியும் இல்லை, தார்மீக உதவிகளும் இல்லை என்றநிலையில் மக்களை மத்திய-மாநில அரசுகள் கைவிட்டுவிட்டன.
கொரோனா முற்றிலுமாக எப்போது ஒழியும் என்பது தெரியாது. கொரோனா ஒழிந்தாலும் அதனால் ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார பாதிப்புகளில் இருந்து இந்தநாடும், நாட்டுமக்களும் மீள்வதற்கு பல ஆண்டுகள் ஆகலாம். இத்தகைய நெருக்கடியான காலக்கட்டத்தில் அருமை நண்பர் வசந்தகுமாரின் மரணம் அதிக வருத்தத்தை அளிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசுகையில், ‘எச்.வசந்தகுமார் பிறவியில் தேசிய உதிரம் கொண்டவர். அவருடைய வாழ்நாள் முழுவதும் காங்கிரஸ் கட்சிக்காகவும், காமராஜர், இந்திராகாந்தி, சோனியாகாந்தி ஆகியோருக்காகவும் தன்வாழ்வை அர்ப்பணித்தவர். இயக்கத்தை அதிகம் நேசித்தவர். அவருடைய மரணத்தை கனவில்கூட நினைக்கவில்லை. மனிதகுலத்துக்கு மரணம் என்பதை தவிர்க்கமுடியாது. விதியை யாராலும் மாற்றமுடியாது. ஆயிரம்முறை நீரில் மூழ்கினாலும் எச்.வசந்தகுமாரின் நினைவுபோகாது. அவருடைய புகழ் என்றும் ஓங்கிநிற்கும்’ என்றார்.
திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், ம.தி.மு.க. துணைபொதுச்செயலாளர் மல்லை சத்யா, மனிதநேய மக்கள்கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் முன்னாள் எம்.பி. அப்துல்ரகுமான், கொங்குநாடு மக்கள் தேசியகட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர்கள் எம்.கிருஷ்ணசாமி, கே.வி.தங்கபாலு, சு.திருநாவுக்கரசர், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோரும் புகழாரம் சூட்டினார்கள்.
காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் ஆ.கோபண்ணா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியின் இறுதியாக எச்.வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் நன்றி உரையாற்றினார்.
நிகழ்ச்சியின் இடையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்தி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரியை செல்போனில் தொடர்புகொண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி தொடர்பாக கேட்டறிந்து, வசந்தகுமாரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார்.
Related Tags :
Next Story