ஊர்வலம் சென்ற ஆயுதப்படை போலீஸ்காரரின் ஊதிய உயர்வை ரத்து செய்தது சரி; ஐகோர்ட்டு உத்தரவு
கோவை ஆயுதப்படை போலீசார் கமிஷனர் அலுவலகம் நோக்கி ஊர்வலம் சென்ற சம்பவத்தில், போலீஸ்காரருக்கு 2 ஆண்டு ஊதிய உயர்வை ரத்து செய்ய போலீஸ் கமிஷனர் கூறியது சரியானது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
கோவை ஆயுதப்படை போலீசார் பலருக்கு கடந்த 2012-ம் ஆண்டு பல்வேறு இடங்களுக்கு இடமாறுதல் உத்தரவு வந்தது. இதன்படி, மாறுதல் பெற்ற போலீசாரை மொத்தமாக விடுவிக்கவில்லை. 2012-ம் ஆண்டு டிசம்பர் 9-ந் தேதி முதலில் 138 பேரை உயர் அதிகாரிகள் விடுவித்தனர். இதை கண்டித்து ஆயுதப்படை போலீசார் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாறுதல் பெற்ற அனைவரையும் உடனே விடுவிக்க வேண்டும் என்று ஆயுதப்படை துணை கமிஷனர் அலுவலகத்தில் கூக்குரலிட்டனர். பின்னர் கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலம் சென்றனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆயுதப்படை போலீசாருக்கு எதிராக துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. விசாரணையில் இவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால், பின்தொடர்ச்சியாக 3 ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வை ரத்து செய்து கடந்த 2015-ம் ஆண்டு உத்தரவிடப்பட்டது. இதனால், ஊதிய உயர்வு ரத்து செய்யப்படுவதால், பிற்காலத்தில் இவர்களுக்கு பதவி உயர்வு பெறுவதிலும் காலதாமதம் ஆகும்.
இந்த தண்டனையை எதிர்த்து, தற்போது மதுரை ஆயுதப்படையில் பணியாற்றி வரும் மாரிமுத்து என்ற போலீஸ்காரர், அப்போது கோவை போலீஸ் கமிஷனராக இருந்த ஏ.கே.விஸ்வநாதனிடம் முறையிட்டார். போலீஸ் கமிஷனர், பின்தொடர்ச்சி இல்லாமல் 2 ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வு ரத்து என்று தண்டனையை குறைத்து உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் மாரிமுத்து வழக்கு தொடர்ந்தார். போலீஸ் கமிஷனர் தன் மனதை செலுத்தாமல் இவ்வாறு உத்தரவிட்டுள்ளதாகவும், ஊர்வலத்தில் தான் பங்கேற்றதற்கான ஆதாரம் இல்லை என்றும், எனவே உயர் அதிகாரிகளின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் விசாரித்தார். பின்னர் அவர் பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-
இடமாறுதல் பெற்ற ஆயுதப்படை போலீசார்களில் பலர் வி.ஐ.பி.க்கள் பாதுகாப்பு, சிறை கைதிகளை கோர்ட்டுக்கு அழைத்து செல்வது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டிருந்ததால், அவர்களை உடனே பணியில் இருந்து உயர் அதிகாரிகள் விடுவிக்கவில்லை. முதலில் 138 பேரை விடுவித்துள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயுதப்படை போலீசார் கூச்சலிட்டு, ஊர்வலம் சென்றுள்ளனர். ஆவணங்களை பார்க்கும் போது, நடந்த சம்பவம் குறித்து சக போலீசார் அளித்த வாக்குமூலத்தில் மனுதாரரும் இதில் பங்கேற்றார் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு போலீஸ் ஒழுக்க விதிகளின்படி, போலீசார் வேலை நிறுத்தம் அல்லது அதுபோன்ற (போராட்ட) நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது. மனுதாரர் வேலை நிறுத்தம் போன்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்படியிருந்தும், போலீஸ் கமிஷனர் கனிவாக பரிசீலித்து, பின்தொடர்ச்சியில்லாமல் 2 ஆண்டுகளுக்கு மட்டும் ஊதிய உயர்வை ரத்து செய்துள்ளார். மனுதாரருக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையில் சட்டவிரோதம் இல்லை. எனவே, கோவை போலீஸ் கமிஷனர் உத்தரவு சரியானது. அதை உறுதி செய்து, வழக்கை தள்ளுபடி செய்கிறேன். இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.
Related Tags :
Next Story