அரியர் மாணவர்கள் தேர்ச்சி விவகாரம்: தமிழக அரசு தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும் - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்


அரியர் மாணவர்கள் தேர்ச்சி விவகாரம்: தமிழக அரசு தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும் - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 13 Sep 2020 5:50 AM GMT (Updated: 13 Sep 2020 5:50 AM GMT)

தமிழக அரசு, அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்ற தன்னுடைய நிலையில் உறுதியாக இருக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

இது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

"கொரோனா நோய் தொற்றின் காரணமாக உயர்கல்வி பயிலும் மாணவர்களின் நலன் கருதி அரியர் வைத்து இருந்த மாணவர்கள், அரியர் தேர்வுக்கான கட்டணம் செலுத்தியிருந்தால் அவர்கள் அனைவரும் தேர்ச்சி அடைந்தாக தமிழக அரசு அளிவித்துள்ளது.

தமிழக அரசின் உயர்மட்டக் குழு, பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழு ஆகியவற்றின் வழிகாட்டுதலின் அடிப்படையில், கலை மற்றும் அறிவியல் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களும், பல்வகை தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவர்களும், முதுகலை பொறியியல் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களும் இறுதியாண்டை தவிர்த்து மற்ற ஆண்டுகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் தேர்வானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தற்போது அனைத்திந்திய தொழில் நுட்பக் கல்விக்குழு பொறியியல் பட்டப்படிப்புக்கு அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி அளிக்கக் கூடாது என்று கூறியுள்ளது. தமிழக அரசின் அறிவிப்பில் எந்தவிதமான விதி மீறலும் இல்லை. இறுதி ஆண்டு தேர்வு எழுதும் மாணவர்களுக்குத் தேர்ச்சியும் வழங்கவில்லை. அப்படியிருக்கும் போது எதிர்ப்பு தெரிவிப்பது எந்தவிதத்தில் நியாயம்.

தமிழக அரசு மாணவர்களின் நலனில் அக்கறைக்கொண்ட அரசாக செயல்படுகிறது. கடந்த ஆகஸ்டு மாதம் 26-ம் தேதி அறிவிக்கப்பட்ட உத்தரவை உறுதியாக கடைபிடிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்"

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

Next Story