தமிழகம், கேரளாவில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.4 ஆயிரத்து 700 கோடி மோசடி; 2 பேர் சிக்கினர்
நிதி நிறுவனம் நடத்தி ரூ.4 ஆயிரத்து 700 கோடி மோசடி செய்த கோவையை சேர்ந்த 2 பேரை சேலம் குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கைதானவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்ததால், சேலம் குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகம் மூடப்பட்டது.
சேலம்,
நிதி நிறுவனம் நடத்தி ரூ.4 ஆயிரத்து 700 கோடி மோசடி செய்த கோவையை சேர்ந்த 2 பேரை சேலம் குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கைதானவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்ததால், சேலம் குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகம் மூடப்பட்டது.
கோவை ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்தவர் கவுதம் ரமேஷ் (வயது 30). அதே பகுதியை சேர்ந்தவர் பிரவீன் குமார் (28). இவர்கள் இருவர் உள்பட பலர் சேர்ந்து கோவையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிதி நிறுவனம் தொடங்கினர். அப்போது ரூ.1 லட்சம் கட்டினால் ரூ.4 லட்சம் தருவதாக கூறினர். இதைத் தொடர்ந்து ஏராளமானவர்கள் லட்சக்கணக்கில் பணம் கட்டினர்.
இந்த நிலையில் அவர்கள் சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் ஒரு தனியார் கட்டிடத்தில் அந்த நிதி நிறுவன கிளையை தொடங்கினர். இதில் சேலத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் லட்சக்கணக்கில் பணம் கட்டினர். பிறகு கட்டிய பணத்துக்கு வட்டியுடன் திரும்ப கேட்டுள்ளனர்.
அப்போது அவர்கள் பொதுமக்கள் கட்டிய பணத்தை பிறகு தருவதாக கூறி காலதாமதப்படுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் அவர்கள் நிதி நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவாகிவிட்டனர். இதைத்தொடர்ந்து பணம் கட்டி ஏமாந்த சேலத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் மாதேஷ் உள்பட ஏராளமானவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில் குமாரை சந்தித்து புகார் மனு கொடுத்தனர்.
அதில் நிதி நிறுவனம் நடத்தி பிரவீன் குமார், கவுதம் ரமேஷ் உள்பட பலர் கோடிக்கணக்கில் மோசடி செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டனர். அவர்களை கைது செய்து பணத்தை திரும்பப் பெற்றுத் தரும்படி கூறியிருந்தனர்.
இதையடுத்து போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் மோசடி கும்பலை கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில் அவர்கள் இருவரும் சேலம் புதிய பஸ் நிலையம் அருகே தங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் நேற்று காலை கவுதம் ரமேஷ், பிரவீன் குமார் ஆகிய 2 பேரை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர்களை குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் தமிழகம் மட்டுமல்லாமல் கேரளாவிலும் பல்வேறு இடங்களில் நிதி நிறுவனம் தொடங்கி கோடிக்கணக்கில் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் இருவரிடமும் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களை தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, ‘இந்த கும்பலை சேர்ந்தவர்கள் தமிழகம் மற்றும் கேரளாவில் பல்வேறு இடங்களில் நிதி நிறுவனம் மூலம் மோசடி செய்துள்ளனர். அதன்படி தமிழகத்தில் ரூ.1,200 கோடியும், கேரளாவில் ரூ.3,500 கோடியும் என மொத்தம் ரூ.4 ஆயிரத்து 700 கோடி மோசடி செய்து இருப்பது தெரிய வருகிறது‘ என்றனர்.
இந்த நிலையில் மோசடி கும்பல் கைது செய்யப்பட்ட தகவல் கேரள போலீசாருக்கு கிடைத்தது. இதையொட்டி கவுதம் ரமேஷ், பிரவீன் குமார் ஆகிய 2 பேரை கேரளாவுக்கு அழைத்து சென்று விசாரிப்பதற்காக கேரள போலீசார் சேலம் வந்து உள்ளனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட இருவரையும் கொரோனா நோய்தொற்று பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் போலீசார் சேர்த்தனர். அங்கு பரிசோதித்தபோது பிரவீன் குமாருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகம் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் விசாரணை செய்த போலீசாருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
Related Tags :
Next Story