வீட்டு வாசலில் கோலம் போட்ட பெண் அடித்துக்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை


வீட்டு வாசலில் கோலம் போட்ட பெண் அடித்துக்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 18 Sep 2020 11:19 PM GMT (Updated: 2020-09-19T04:49:59+05:30)

வீட்டு வாசலில் கோலம் போட்ட பெண் அடித்துக்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை

.சீர்காழி,

அதிகாலையில் வீட்டு வாசலில் கோலம் போட்ட பெண் கொடூரமாக அடித்துக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கான காரணம் என்ன? கொலையாளி யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாகை மாவட்டம் சீர்காழி தென்பாதி திருவள்ளுவர் நகர் இரண்டாவது தெருவில் வசித்து வருபவர் ஆனந்த ஜோதி(வயது 53). இவர், கொள்ளிடம் ஒன்றியம் ஓதவந்தான்குடி அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இவரது மனைவி சித்ரா(49). இவர்களுக்கு சுரேஷ்(26) என்ற மகனும், சுவாதி(20) என்ற மகளும் உள்ளனர். சுரேஷ், சென்னையில் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். சுவாதி, திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. படித்து வருகிறார். தற்போது குழந்தைகள் இருவரும் தங்கள் பெற்றோருடன் வசித்து வந்தனர்.

சித்ரா தினமும் அதிகாலையில் எழுந்து தனது வீட்டு வாசலை பெருக்கி கோலம் போடுவதை வழக்கமாக கொண்டு இருந்தார். நேற்றும் அதிகாலையில் எழுந்து தனது வீட்டு வாசலில் உள்ள தார் ரோட்டை பெருக்கி கோலம் போட்டுள்ளார். அவர் கோலம் போட்டுக்கொண்டு இருந்தபோது பின்னால் வந்த மர்ம நபர், சித்ராவின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். பின்னர் அந்த மர்ம நபர், சித்ராவின் முகம் மற்றும் வயிற்றிலும் கடுமையாக தாக்கியுள்ளார் இதில் தலை சிதைந்து சம்பவ இடத்திலேயே சித்ரா, ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

அதிகாலை நேரம் என்பதால் இந்த சம்பவம் சித்ராவின் குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினருக்கு தெரியவில்லை.ரத்த வெள்ளத்தில் சித்ரா பிணமாக கிடந்ததை பக்கத்து வீட்டுக்காரர் பார்த்து அவர் சத்தம் போட்டு அலறி உள்ளார். அவரது சத்தம் கேட்டு அவரது குடும்பத்தினர் மறறும் ஆனந்தஜோதி குடும்பத்தினர், அக்கம் பக்கத்தினர் தங்களது வீடுகளிள் இருந்து வெளியே வந்து பார்த்தனர். அப்போதுதான் கோலம் போட வந்த சித்ரா கொலை செய்யபட்டது அனைவருக்கும் தெரிய வந்தது.

இந்த கொலை சம்பவம் குறித்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், கொலை நடந்த வீட்டின் அருகில் உள்ள ஒரு வீட்டில் வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், சம்பவம் நடந்த இடத்தில் இருந்து வேகமாக ஓடுவது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. ஆனால் அந்த வாலிபரின் முகம் அதில் சரியாக தெரியவில்லை.

கொலை செய்யப்பட்ட சித்ரா அணிந்து இருந்த நகைகள் அனைத்தும் அப்படியே இருந்தது. இதனால் இந்த கொலை நகைக்காக நடைபெற வாய்ப்பு இல்லை என்று போலீசார் தெரிவித்தனர். பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story