தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் இணையதளத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி


தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் இணையதளத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி
x
தினத்தந்தி 20 Sep 2020 6:41 AM GMT (Updated: 20 Sep 2020 6:41 AM GMT)

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் இணையதளத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

சென்னை, 

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் 2 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட https://www.tnskill.tn.gov.in/ என்ற இணைதளத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இதன்மூலம், பயனாளர்களின் பதிவுகள், பயிற்சி வழங்கும் நிறுவனங்களின் அங்கீகாரங்கள், இணையவழி சான்றிதழ்கள், ஆதார் எண் இணையப்பெற்ற வருகை பதிவேடு பராமரித்தல், உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள இயலும்.

மேலும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துடன், தி ராம்கோ சிமெண்ட்ஸ் லிமிடெட் நிறுவனம், கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு பிரிவில் உயர்தர திறன் மேம்பாட்டு மையம் நிறுவிடவும், கோர்ஸெரா நிறுவனம், தமிழ்நாட்டில் 50,000 வேலையற்ற நபர்களுக்கு இணைய வழியில் இலவசமாக கல்வி மற்றும் பயிற்சி அளித்திடவும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

அத்துடன், ஒருங்கிணைந்த ஒற்றைத் திறன் பதிவு தொகுதியை (Unified Single Skill Registry) உருவாக்கும் நோக்கில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் பிற துறைகளின் விவரங்களை உள்ளடக்கியதாக இவ்விணையதளம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமையின் உதவியுடன் தமிழ்நாடு முதலீட்டு மேம்பாட்டுத் திட்டம் - நிலை ஐஐ-ன் ஒரு பகுதியாக, 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு பிரிவில் உயர்தர திறன் மேம்பாட்டு மையம் நிறுவிட, முதல்வர் முன்னிலையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்திற்கும், தி ராம்கோ சிமெண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அமெரிக்கா நாட்டின், கலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கோர்ஸெரா (Coursera) நிறுவனம் உலகத்தரம் வாய்ந்த முன்னணி இணையவழி கற்றல் தளமாகும். இந்நிறுவனம், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், கூகுள், ஐபிஎம் போன்ற நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களுடன் சேர்ந்து இணைய வழியில் பொறியியல், இயந்திர கற்றல், கணிதம், வணிகம், கணினி அறிவியல், டிஜிட்டல் சந்தைப்படுத்தல், மருத்துவம், உயிரியல், சமூக அறிவியல் மற்றும் பிற பாடங்களில் சான்றிதழ் மற்றும் பட்டப் படிப்புகளை வழங்கி வருகிறது. மேலும், இந்நிறுவனம் உலகெங்கிலும் உள்ள 80 நாடுகளில் திறன்களை வளர்க்கும் நோக்கில் பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறது.

தமிழ்நாட்டில் 50,000 வேலையற்ற நபர்களுக்கு இணைய வழியில் இலவசமாக கல்வி மற்றும் பயிற்சி அளித்திடும் வகையில், முதல்வர் முன்னிலையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்திற்கும், கோர்ஸெரா நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம், வேலையற்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் இந்நிறுவனம் வழங்கும் இணையவழி பயிற்சி வகுப்புகளால் வேலைவாய்ப்பு பெற வழிவகை ஏற்படும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story