தமிழக விவசாயிகள், மக்கள் நலனுக்கு எதிரான மேகதாது அணை கட்டுமான பணிக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது பிரதமருக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம்


தமிழக விவசாயிகள், மக்கள் நலனுக்கு எதிரான மேகதாது அணை கட்டுமான பணிக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது பிரதமருக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம்
x
தினத்தந்தி 23 Sept 2020 4:56 AM IST (Updated: 23 Sept 2020 4:56 AM IST)
t-max-icont-min-icon

தமிழக விவசாயிகள், மக்கள் நலனுக்கு எதிரான மேகதாது அணை கட்டுமான பணிக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது என்று பிரதமருக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தை தி.மு.க. எம்.பி.க்கள் பிரதமரை நேரில் சந்தித்து கொடுத்தனர்.

சென்னை,

காவிரி நடுவர் மன்ற மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளுக்கு எதிராக, கர்நாடகாவில் மேகதாது அணை அமைப்பது தொடர்பாக கர்நாடக அரசு அளித்துள்ள திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது மற்றும் அணைகட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை அக்கட்சியின் எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, ஆ.ராசா, திருச்சி சிவா, தயாநிதிமாறன் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியிடம்டெல்லியில் நேரில் சந்தித்து கொடுத்தனர்.

மு.க.ஸ்டாலின் எழுதிய அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கர்நாடக மாநில முதல்-மந்திரி எடியூரப்பா, தங்களை சந்தித்தபோது, தமிழகத்தின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, மேகதாது அணை உள்ளிட்ட நீர்ப்பாசன மற்றும் குடிநீர்த்திட்டங்களுக்கு முன்கூட்டியே அனுமதி வழங்குமாறு வலியுறுத்தி இருப்பது எனக்கு மிகவும் ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது.

மேகதாது அணை திட்டம், 5.2.2007 அன்று காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பையும், 16.2.2018 அன்று சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பையும் முற்றிலும் மீறுவதாகும். மேலும் இது விவசாயிகளின் நலனுக்கும், பொதுமக்களின் குடிநீர் தேவைகளுக்கும் தீங்கு விளைவிக்கக் கூடியதாகும்.

கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக விவசாயிகளும், பொதுமக்களும் தொடர்ந்து உறுதியாக தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். மேலும் மேகதாது அணை திட்டம் மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பங்கீட்டு விதிமுறைகளுக்கு எதிரானது என்பதால் அதனை ஏற்க முடியாது என நிராகரித்து, தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தற்போது இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. எனவே, மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கும் விவகாரம் தற்போது நீதிமன்றம் தீர்மானிக்கவேண்டிய ஒன்றாக உள்ளது.

குடிநீர் திட்டம் என்ற போர்வையில் முன்மொழியப்படும் மேகதாது அணை திட்டம் காவிரியின் தாழ்வான வடிநில பகுதிகளாக உள்ள மாநிலங்களுக்கு குறிப்பாக தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வருவதில், எப்போதுமே சரிசெய்யவோ, மாற்றியமைக்கவோ முடியாத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், பல லட்சம் மக்களின் தேவையை நிறைவு செய்யும் கூட்டு குடிநீர் திட்டங்களுக்கும் இது பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

மிக முக்கியமாக, அரசு இதழில் வெளியிடப்பட்டுள்ள இறுதி தீர்ப்பின்படி தமிழகத்திற்கான நீர்ப்பங்கீட்டை இது கடுமையாக பாதிக்கும். எனவே தமிழக விவசாயிகள் மற்றும் மக்கள் நலனுக்கு எதிரான மேகதாது அணை குறித்த விரிவான திட்ட அறிக்கைக்கோ அல்லது கட்டுமான பணிக்கோ கர்நாடக முதல்- மந்திரி கோரியபடி ஒப்புதல் வழங்கக்கூடாது என சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சகங்களுக்கு அறிவுறுத்துமாறு, தி.மு.க. சார்பாக தங்களை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story