ராகுல்காந்தி கைது சம்பவத்துக்கு உ.பி. முதலமைச்சர் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் - மு.க.ஸ்டாலின்
ராகுல்காந்தி கைது சம்பவத்துக்கு உ.பி. முதலமைச்சர் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
உ.பி.யில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்றபோது ராகுல்காந்தி கைது செய்யப்பட்டார். காவல்துறை தடையை மீறி சென்றதால் ராகுல்காந்தி கைது செய்யப்பட்டார். ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் காரில் ஹத்ராஸ் சென்றபோது காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். தொற்றுநோய் தடுப்பு சட்டப்படி ராகுல், பிரியங்கா காந்தியை அனுமதிக்க முடியாது என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
இந்தநிலையில் உத்தரப்பிரதேசம் ஹத்ராஸ் மாவட்டத்திற்கு செல்லும் வழியில் ராகுல்காந்தி கைது சம்பவத்துக்கு உ.பி. முதலமைச்சர் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
"உத்தரப்பிரதேசத்தில் தொடரும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள், அந்த மாநிலம் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாததாக உள்ளது என்பதையே எடுத்துக் காட்டுகிறது."
மேலும் "பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறச் சென்ற திரு. ராகுல் காந்தி அவர்களை, ஓர் அகில இந்தியத் தலைவர் என்றும் பாராமல், பிடித்துத் தள்ளி மரியாதைக் குறைவாக நடத்துவது மனித உரிமைகளுக்கும், ஜனநாயக நெறிமுறைகளுக்கும் எதிரானது; இந்த சம்பவத்துக்கு உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்."
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story