போக்குவரத்து கழக தொழிலாளர்கள் முத்தரப்பு பேச்சுவார்த்தை: வருகிற 22-ந்தேதி சென்னையில் நடக்கிறது


போக்குவரத்து கழக தொழிலாளர்கள் முத்தரப்பு பேச்சுவார்த்தை: வருகிற 22-ந்தேதி சென்னையில் நடக்கிறது
x
தினத்தந்தி 14 Oct 2020 2:15 AM IST (Updated: 14 Oct 2020 1:36 AM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்து கழக தொழிலாளர்களின் 14-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான முத்தரப்பு பேச்சுவார்த்தை சென்னையில் வருகிற 22-ந்தேதி நடக்கிறது.

சென்னை, 

தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் தொடர்பான முத்தரப்பு பேச்சுவார்த்தை சென்னையில் வருகிற 22-ந்தேதி நடக்கிறது.

இதுகுறித்து தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை (தொ.மு.ச.) பொருளாளர் கி.நடராஜன் கூறியதாவது:-

போக்குவரத்து கழக தொழிலாளர்களின் 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையில் தமிழக அரசும், போக்குவரத்து கழக நிர்வாகங்களும் ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் பணி இடமாற்றம் உள்ளிட்ட பல்வேறு முறையில் பழிவாங்கப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் அவர்கள் பணி செய்த இடத்திலே பணி அமர்த்தப்பட வேண்டும்.

போக்குவரத்து கழக தொழிலாளர்களின் சீருடை, தையற்கூலி, காலணி வழங்குவதை முறைப்படுத்த வேண்டும். போக்குவரத்து கழக தொழிலாளர்களின் ஆய்வு பலன் வழங்குவது, பதவி உயர்வு வழங்குவது, சம்பந்தமாக உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும். ஊதிய ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொண்ட ஒப்பந்தத்தை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டி உள்ளது.

இந்தநிலையில் தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்த அறிவிப்பை தொடர்ந்து தொழிலாளர் நலத்துறையால் சமரச நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. கொரோனா தொற்று பரவல் காரணமாக சமரச நடவடிக்கைகள் முற்றிலுமாக நிறுத்திவைக்கப்பட்டது. இந்தநிலையில் சமரச நடவடிக்கை தொடர்பாக தொழிலாளர் நலத்துறை, போக்குவரத்து கழக நிர்வாகங்கள் மற்றும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அடங்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தை, சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் வருகிற 22-ந்தேதி காலை 11 மணிக்கு தொழிலாளர் நலத்துறை ஆணையர் அலுவலகத்தில் நடக்கிறது.

இதில் கலந்து கொண்டு தங்கள் தரப்பு தகவல்களை தெரிவிப்பதற்காக போக்குவரத்து கழக நிர்வாகத்தினருக்கும், போக்குவரத்து கழக தொழிற்சங்கங்களுக்கும், தொழிலாளர் நலத்துறை அழைப்பு விடுத்து உள்ளது. இந்த அழைப்பை ஏற்று கூட்டத்தில் கலந்து கொண்டு முறையாக எங்கள் கோரிக்கைகளை முன்வைப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story